புதுச்சேரி: பொதுக்கணக்கு குழுவின் தலைவரும், திமுகவைச் சேர்ந்த மதிப்பீட்டு குழு தலைவரும், பாஜகவை சேர்ந்த சட்டப்பேரவை தலைவரின் அத்துமீறிய செயலுக்கு துணை போவது என்பது திமுகவுக்கும், பாஜகவுக்கும் உள்ள ரகசிய உறவின் வெளிப்பாடாகும் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்டமன்ற சட்டங்கள் மற்றும் மரபுகள் எதையும் மதிக்காமல் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் செயலாற்றி வருகிறார்.அரசியல் அமைப்பு சட்டம் சட்டப்பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் படி சட்டப்பேரவை தலைவருக்கு சட்டமன்றத்தில் பல்வேறு குழுக்களை அமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுக்கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு, அரசாங்க உறுதிமொழி குழு, மனுக்கள் பற்றிய குழு, உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைக்கவும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவும், பேரவைத் தலைவர் பொறுப்பாவார்.
புதுச்சேரி அரசின் வரவு, செலவினங்களை ஆய்வு செய்யும் மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை மீது சரிவர கணக்குகளை சமர்ப்பிக்காத அரசு துறைகளுக்கு விளக்கம் கேட்டு, ஏனாம் பகுதியில் பொது கணக்கு குழு மற்றும் மதிப்பீட்டு குழுக்களின் தணிக்கை கூட்டம் இன்று (டிச.16) நடைபெறுகிறது. இவ்விரு குழுக்களிலும் உறுப்பினராக இல்லாத பேரவைத்தலைவர் சட்டத்தையும், மரபுகளையும் மீறி தனது தலைமையில் தணிக்கை குழு கூட்டத்தை நடத்தவது என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும்.
மேலும் பொதுக் கணக்கு குழு, மதிப்பீட்டு குழு ஆகிய இவ்விரு குழுக்களின் தலைவர்களின் முக்கியத்துவத்தை குறைத்து தானே முழு அதிகாரத்தையும் கையில் எடுப்பது என்பது சட்டமன்ற நடத்தை விதிகளுக்கு புறம்பான ஒன்றாகும்.இவ்விரண்டு குழுக்களின் சுதந்திரமான செயல்களை ஆட்சி அதிகாரத்தில் உள்ள சட்டப்பேரவை தலைவர் பறிப்பது தவறான ஒன்றாகும். இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உள்ள பேரவைத்தலைவரும் செய்யாத ஒரு செயலை புதுச்சேரி பேரவைத்தலைவர் செய்கிறார்.
சம்பந்தப்பட்ட குழுக்களின் தலைவர்களே வாய்முடி மவுனம் காப்பது ஏன்?. அதிலும் குறிப்பாக பொதுக்கணக்கு குழுவின் தலைவரும், திமுகவை சேர்ந்த மதிப்பீட்டு குழு தலைவரும், பாஜகவை சேர்ந்த சட்டப்பேரவை தலைவரின் இந்த அத்துமீறிய செயலுக்கு துணை போவது என்பது திமுகவுக்கும், பாஜகவுக்கும் உள்ள ரகசிய உறவின் வெளிப்பாடாகும்,” என்று தெரிவித்துள்ளார்.