கோப்புப் படம் 
தமிழகம்

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்பது என் நோக்கமில்லை: திருமாவளவன் விளக்கம்

கி.கணேஷ்

சென்னை: “விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்பது என் நோக்கமில்லை” என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இடைநீக்கம் குறித்து பொதுவெளியில் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து கட்சிக்கு எதிராகவும், கட்சி தலைமைக்கு எதிராகவும் தான் இருந்தது. அந்த விளக்கம் அவருடைய பார்வையில் சரியானதாக இருந்தால் கூட, ஒரு கட்சியின் நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை. தனக்கு எல்லாம் தெரிந்தாலும் கூட, பேசுவதெல்லாம் சரிதான் என்றாலும் கூட கட்சியுடன் இணைந்து, கட்சி கட்டுப்பாட்டுக்குள் செயல்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

ஆதவ் அர்ஜுனாவிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது. உடனே எதையும் சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறார். ஒரு கட்சிக்குள் வந்துவிட்டால் எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் கூட, அந்த கட்சிக்கு கட்டுப்பட வேண்டும். அவரது கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் கூட கட்சியின் நடைமுறைக்கு இணங்க வேண்டும். இதை அவரிடம் பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறோம். இந்நிலையில் ஆதவ் கட்சியில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவு, அவருக்கு சரி என்கிற அடிப்படையில் எடுத்திருக்கிறார். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை), ‘விசிகவிலிருந்து விலகுகிறேன்; சமத்துவம், சமநீதி அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும். என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.” என்று விலகலை அறிவித்து அதற்கான காரணங்களையும் அடுக்கியிருந்தார். இந்நிலையில், ‘விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்பது என் நோக்கமில்லை’ என்று திருமாவளவன் முன்வைத்துள்ள கருத்து கவனம் பெறுகிறது.

SCROLL FOR NEXT