மதுரையில் அனைத்து பிராமண சங்கங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.  
தமிழகம்

“சனாதன கொள்கைகளை பாதுகாக்க இந்துக்கள் முன்வர வேண்டும்” - அர்ஜுன் சம்பத் அழைப்பு

கி.மகாராஜன்

மதுரை: ‘இந்துக்கள் கோயில்களுக்கு மட்டும் சென்றால் போதாது, அனைவரும் சனாதன கொள்கைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக்கொண்டார்.

மதுரை எஸ்.எஸ்.காலனி ஸ்ரீ மஹா பெரியவா கோயிலில் இந்து மக்கள் கட்சி மற்றும் மதுரை அனைத்து பிராமண சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார்.

பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சனாதன எதிர்ப்பு என்ற போர்வையில் தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கட்டமைத்து வருகின்றனர். வேறு மதத்தை சேர்ந்த பாடகி இசைவாணி, ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடியது ஐயப்ப பக்தர்களை வேதனையடைச் செய்துள்ளது.

கனிமொழி குறித்து பேசியதற்காக எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இசைவாணிக்கு எதிராக புகார் அளித்தால் போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். தமிழகத்தின் சனாதன ஆதரவாளர்களை ஒடுக்கும் முயற்சியை கண்டித்து ஜன.5-ல் மதுரை பழங்காநத்தம் ரவுண்டான அருகே பிராமணர் சமுதாயத்தினர் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்க்கின்றனர். கலைஞர் கைவினை திட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கின்றனர். இந்துக்கள் கோயில்களுக்கு மட்டும் சென்றால் போதாது, சனாதன கொள்கைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்” இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில தலைவர் திருமாறன், இந்துமக்கள்கட்சி மதுரை மாவட்டத்தலைவர் சோலைகண்ணன், அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ஆறுமுகம் பிள்ளை, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மதுரை மாவட்ட பிராமண சேவா சமாஜம் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணசாமி ராஜு, மாவட்டத் தலைவர் ரவி மற்றும் அமைப்பு செயலாளர் ஸ்ரீ ராமன், பழங்காநத்தம் கிளைத் தலைவர் விஸ்வநாதன், மதுரை மாவட்ட தாம்ப்ராஸ் சார்பில் வெங்கடேசன் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT