தமிழகம்

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி 5 இடங்களில் தர்ணா: சிஐடியு அறிவிப்பு

செ.ஆனந்த விநாயகம்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி 5 இடங்களில் தர்ணா நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: ''ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு கால பணப்பலன், மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். அனைத்து துறையின் ஓய்வு பெற்றவர்களும் அகவிலைப்படி உயர்வு பெறும்போது, போக்குவரத்து துறையில் மட்டும் 9 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படுகிறது.

அதே நேரம், திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவில்லை. ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. போக்குவரத்துக் கழகங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மையங்களில் தர்ணா போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான ஓய்வூதியர்கள், ஊழியர்கள் பங்கேற்பர்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT