திருச்சி: “ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய சூழலில் முரண்பாடான கருத்தை கூறுவது தவறு. ஆறு மாதத்திற்குப் பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை உணர முடிகிறது. எங்கள் கட்சியின் நடைமுறையின் அடிப்படையில் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார்.” என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அரசமைப்பு சட்டத்தையும், அம்பேத்கரையும் போற்றி, புகழ்ந்து கொண்டே அரசமைப்பு சட்டம் மீது மூர்க்கமான தாக்குதலை பாஜக அரசு நடத்தி வருகிறது. ஏற்கனவே 375 வது சட்டப்பிரிவைக் கொண்டு வந்து அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தினார்கள், முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தார்கள். 370 வது சட்டப்பிரிவை நீக்கினார்கள். சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தார்கள். இதெல்லாம் அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
வழிபாட்டு தளங்களுக்கான சட்டம் 1948 கொண்டு வந்து சட்டத்தை பொருட்படுத்தாமல் அதனை அவமதிக்கும் வகையில் நீதிமன்றம் வழியாக ராமர் கோயிலை கட்டி முடித்தனர், எனவே, தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த ஆபத்தை தடுக்க அணி திரள வேண்டும். இது குறித்த விவாதத்தில் நாடாளுமன்றத்தில் கருத்துக்களை பதிவு செய்ய நான் முயன்ற போது என்னை அனுமதிக்கவில்லை.
ரூ.5000 நிதியுதவி.. தமிழ்நாடு அரசு ரூ.2,475 கோடி வெள்ள நிவாரணமாக கேட்டதற்கு மத்திய அரசு 944.80 கோடியை கொடுத்துள்ளனர். தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
அரசியலுக்காக தான் கூட்டணி கட்சிகளை திமுக பயன்படுத்துகிறது என்கிற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது: அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வரப் பார்க்கிறார்கள். அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற நிலையை இங்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இத்திட்டத்தால் கூட்டணி கட்சிகளின் தயவே இல்லாமல் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். எதிர்க்கட்சிகள் யாரும் ஆளும்கட்சியை கேள்வி கேட்க முடியாது. இது மிகவும் ஆபத்தானது. ஜனநாயகத்துக்கு, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
ஆதவ் அர்ஜுனுக்கு கண்டனம்: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காதது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்து விட்டேன். என்னை யாரும் அழுத்தம் கொடுத்து இணங்க வைக்க முடியாது. சில நேரங்களில் முதல்வரை பார்க்க முடியாத தருணங்களில் மற்ற அமைச்சர்களை பார்த்து பேசுவது உண்டு. அப்படித்தான் நான் அமைச்சர் எ.வ. வேலுவை சந்தித்தேன்.
c இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய சூழலில் முரண்பாடான கருத்தை கூறுவது தவறு. ஆறு மாதத்திற்குப் பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை உணர முடிகிறது. எங்கள் கட்சியின் நடைமுறையின் அடிப்படையில் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.