தமிழகம்

பழனிசாமி நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிடக் கோரி வழக்கு

செய்திப்பிரிவு

மதுரை: அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக தொண்டர்கள், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில் பொதுக்குழுவில் திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய தேர்தல் ஆணையம், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன் பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகாரம் செய்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலா 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய, வழிமொழிய வேண்டும் என்பது உள்ளிட்ட திருத்தப்பட்ட கட்சி விதிகள், தொண்டர்களின் உரிமைக்கு எதிரானதாக உள்ளன.

மேலும், தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், தனக்கு 70 வயதாகிவிட்டதால் நேரில் ஆஜராக இயலாது என்று பழனிச்சாமி கூறியுள்ளார். வரும் தேர்தல்களிலும் அவருக்கு உடல்நலக் குறைவு காரணமாக பிரச்சாரப் பயணங்களை மேற்கொள்ள இயலாமல் போகலாம். எனவே, பழனிச்சாமியை பொதுச் செயலாளராக நியமனம் செய்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு பல மனுக்களை அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, எங்களின் மனுவைப் பரிசீலிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

SCROLL FOR NEXT