அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையில் நாளை கூடுகிறது. இதில் பலரும் பலவிதமான சர்ச்சைகளை கிளப்பக் கூடும் என்பதால், யாரைப் பேசவைக்க வேண்டும் யார் கையில் மைக்கைக் கொடுக்கக் கூடாது என ராஜதந்திர நடவடிக்கைகளில் பழனிசாமி தரப்பு இறங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்கிறார்கள். பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை தயாரிக்க அமைக்கப்பட்ட குழு 3 முறை கூடி விவாதித்துள்ளது.
தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், பல்வேறு வரிகள் உயர்வுக்கு திமுக அரசு தான் காரணம் எனவும், அதை கண்டித்தும் தீர்மானங்கள் இருக்கலாம்.
மேலும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல், மாநிலங்களுக்கான நிதி பகிர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்கிறார்கள்.
மாவட்ட அளவில் கட்சி நிலவரம் குறித்து அறிவதற்காக மூத்த நிர்வாகிகள் தலைமையில் கள ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகிகள் கூட்டம் நடத்தி கள ஆய்வு மேற்கொண்டனர். இதில், நிர்வாகிகள் பலருக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை.
தலைமை நிர்வாகிகள் சம்பிரதாயத்துக்காக கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டனர் என புகார்கள் எழுந்தது. சில இடங்களில் நிர்வாகிகளிடையே மோதலும் ஏற்பட்டது. கள ஆய்வுக் குழுவினர் அளித்த அறிக்கை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதம் இருக்கலாம் என்கிறார்கள்.
ஜெயலலிதா காலத்தில் ஒன்றியச் செயலாளர் கூட அமைச்சர்கள் ஆனார்கள். ஆனால், அவருக்குப் பிறகு அதெல்லாம் சாத்தியமில்லாமல் போய்விட்டது. 2017-ல் அதிமுக நிர்வாகிகள் எந்த இடத்தில் இருந்தார்களோ, அதே பொறுப்புகளிலேயே தொடர்கின்றனர்.
மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்தும் அதற்குக் பொறுப்பான மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படவில்லை. ஜெயலலிதா காலம் போல் இப்போது புதியவர்களுக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை என்பது அதிமுக அடிமட்டத் தொண்டர்களின் ஆதங்கமாக உள்ளது.
இந்த விவகாரம் பொதுக்குழுவில் பெரிதாக வெடிக்கலாம் என்ற தகவல் பழனிசாமி தரப்பின் காதுகளை எட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள். கூட்டத்தில் ஒருவர் எதிர்த்து பேசத் தொடங்கினால், ஒருவர் பின் ஒருவராக பேசக் கிளம்பி விடுவார்கள். அது கட்சிக்கு ஆரோக்கியமாக இருக்காது.
அதை வைத்து ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டவர்கள் கைகொட்டி சிரிப்பார்கள் என்பதால் பொதுக்குழுவில் யார் யாரைப் பேசவைக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டு அவர்களை மட்டுமே பேசவைக்க பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா காலத்திலும் இப்படியான திட்டமிடல் இருக்கும். அதாவது, யாரை கட்டம் கட்ட வேண்டும் என ஜெயலலிதா நினைக்கிறாரோ அவரது மாவட்டத்தில் ஒருவரை தேர்வு செய்து அவர் கையில் மைக்கைக் கொடுத்து கட்டம் கட்டப்பட வேண்டிய நபர் மீதான குற்றச்சாட்டுகளை பேசவிடுவதுதான் ஜெயலலிதா டெக்னிக். அப்படிப் பேசவிடும் நபர்களுக்கு திடீர் பதவிகளை அளித்து திக்குமுக்காட வைப்பார் ஜெயலலிதா. அப்படியெல்லாம் இப்போது செய்யமுடியாது என்பதால் வேறு உத்தியைக் கையில் எடுத்திருக்கிறது இபிஎஸ் தரப்பு.
இது தொடர்பாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்டபோது, "மாவட்டச் செயலாளர்கள் பலர் பழனிசாமிக்கு எதிராக இருப்பதாகவும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரச்சினையை கிளப்ப இருப்பதாகவும் கூட சிலர் பொய்யான தகவலை பரப்பினர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சுமுகமாகவே மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதுபோல பொதுக் குழுவில் பிரச்சினை வெடிக்கும் என்பதெல்லாம் பொய்யான தகவல்; எதிர்க்கட்சிகள் செய்யும் சூழ்ச்சி" என்றார்.