கோவில்பட்டி: கோவில்பட்டியில் 24 மணி நேரத்தில் 36.5 செ.மீ., மழை பெய்தது. இதனால், கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்று காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கோவில்பட்டியில் மட்டும் 36.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பழனியாண்டவர் கோயில் தெருவில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளில் சுமார் 3 அடி தண்ணீர் உள்ளே புகுந்தால் மின்சாதனங்கள் சேதமடைந்தன. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.
அதேபோல், தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கால்நடை மருத்துவமனை, பயணியர் விடுதி, அரசு அலுவலக வளாக சாலை ஆகியவற்றில் மழை நீர் குளம் போல் தேங்கியிருந்தது.
சாத்தூர் செல்லும் சாலையில் ஏஎன்ஏ நகரில் மழைநீர் சூழ்ந்தது. அத்தைகொண்டான் கண்மாயில் இருந்து வெளியேறிய உபரிநீர் இளையரசனேந்தல் சாலையில் சுமார் 3 அடி உயரம் வரை சென்றதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கருணாநிதி நகர், வள்ளுவர் நகர், நடராஜபுரம், மூப்பன்பட்டி பகுதியில் 4 வீடுகள் இடிந்து விழுந்தன.
நகராட்சிக்கு உட்பட்ட பங்களா தெருவில் மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், கடலையூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர் செல்வக்குமார், நகர்மன்ற ஜேஸ்மின் லூர்து மேரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். கடலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. சிதம்பராபுரம் கருங்காலிபட்டியில் உள்ள காலாங்கரைப்பட்டி ஓடை உடைந்து அப்பகுதியை வெள்ளம் சூழ்ந்தது.
கண்மாய் உடைப்பு: மந்தித்தோப்பு கண்மாய் உடைப்பு ஏற்பட்டதால் மணல் மூட்டை கொண்டு அடைக்கப்பட்டது. மணியாச்சி கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு, நான்குவழிச் சாலையை கடந்து மழை வெள்ளம் சென்றது. அணுகுசாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எட்டயபுரத்தில் சிறிய தெப்பக்குளம் நிரம்பி தெருக்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நாவலக்கம்பட்டி சாலை துண்டிக்கப்பட்டது. படர்ந்தபுளி கண்மாய் நிரம்பி வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. கிராம மக்கள் விளாத்திகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரி செய்தனர். ஈராச்சி கண்மாய் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. எட்டயபுரம் வட்டாட்சியர் சங்கரநாராயணன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று, மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். மேலஈராலில் குடிநீர் கண்மாய் உடைந்தது. வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், விளாத்திகுளம் தரைப்பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
எப்பொதும்வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பியதால் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி, கால்வாய் வழியாக வேப்பலோடை அருகே கடலில் கலக்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே உள்ள ஆதனூர் தரைப்பாலத்தில் 12 அடி உயரத்துக்கு மழைநீர் பெருக்கெடுத்து செல்கிறது.