தமிழகம்

முடங்கிக் கிடக்கும் கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத் திட்டம்! - நிதி வரவில்லையா... நிறைவேற்ற மனம் வரவில்லையா?

டி.ஜி.ரகுபதி

கோவை மாநகருக்குள் வரும் வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை ஒரே இடத்திலிருந்து இயக்குவதற்காக வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ரூ.168 கோடி மதிப்பில் 10.60 ஏக்கர் பரப்பில் அமைவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணியை 2020-ல் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேருந்து நிலைய கட்டு​மானப் பணிகள் வேகமாக நடைபெற்ற நிலை​யில், 2021-ல் ஆட்சி மாறிய​தால் பணிகளில் பிரேக் விழுந்​தது. கரோனாவை காரணம் காட்டி கட்டு​மானப் பணிகள் நிறுத்​தப்​பட்டன. அப்போது நின்​றது​தான் இதுவரை எந்த முன்னேற்​ற​மும் இல்லாமல் முடங்​கிக் கிடக்​கிறது. கிட்​டத்​தட்ட 40 சதவீத பணிகள் முடிந்​துள்ள நிலை​யில், அரசு தருவ​தாகச் சொன்ன மானிய தொகை வராத​தால் பணிகளை தொடர முடிய​வில்லை என கைவிரிக்​கிறது மாநக​ராட்சி நிர்​வாகம். அதிமுக​வினரோ, “எங்கள் ஆட்சி​யில் கொண்டு​வரப்​பட்ட திட்டம் என்ப​தால் திமுக அரசு இதை கிடப்​பில் போட்​டுள்​ளது” எனக் கடுகடுக்​கிறார்​கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்​பாளர் பேராசிரியர் கல்யாணசுந்​தரம், “அதிமுக ஆட்சி​யில் கொண்டு வரப்​பட்ட திட்டம் இது என்ப​தால் திமுக அரசால் காழ்ப்பு​ணர்ச்​சி​யுடன் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. திமுக​வுக்கு வேண்​டப்​பட்ட ஓர் ரியல் எஸ்டேட் நிறு​வனத்​தினர் வாங்​கிக் குவித்​துள்ள இடத்​தின் அருகே ஒருங்​கிணைந்த பேருந்து நிலை​யத்தை மாற்றி அந்த இடத்​தின் மதிப்பை அதிகரிக்கத் திட்​ட​மிடு​கிறார்​கள். அதற்​காக, கிட்​டத்​தட்ட ரூ.40 கோடி வரை செலவிடப்​பட்டு​விட்ட இந்தத் திட்​டத்தை முடக்கி மக்களின் பணத்தை வீணடிக்​கிறார்​கள்.

இதுகுறித்து சட்டப்​பேர​வை​யில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பிய போது, ‘விரை​வில் பணிகள் தொடங்​கப்​படும்’ என்றார் அமைச்சர் நேரு. அவர் இப்படிச் சொல்லி மாதக் கணக்​கில் ஆகியும் புதிதாக ஒரு செங்​கலைக்கூட நகர்த்​தவில்லை. இதற்​கெல்​லாம் கோவை மக்கள் தேர்​தலில் திமுக​-வுக்கு தக்க​பாடம் புகட்டு​வார்​கள்” என்றார் ஆவேச​மாக. கோவை திமுக மூத்த நிர்​வாகி​களோ, “நிதி பற்றாக்​குறை காரண​மாகவே பணிகள் நிறுத்​தப்​பட்​டுள்ளன.

இதற்கு வேறெந்த அரசியல் காரண​மும் கிடை​யாது. கோவைக்கு தேவையான திட்​டங்களை தமிழக முதல்வர் தொடர்ச்​சியாக அறிவித்து செயல்​படுத்தி வருகிறார். அதனால் திமுக​-வுக்கு கிடைத்​துள்ள மக்கள் ஆதரவை பொறுத்​துக்​கொள்ள முடியாத அதிமுக​-வினர் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பு​கின்​றனர்” என்கிறார்​கள். பேருந்து நிலைய திட்​டப்​பணியை தொடங்க வலியுறுத்​தும் குழு​வின் ஒருங்​கிணைப்​பாளர்​களில் ஒருவரான கே.எஸ்​.மோகன், ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு, ‘மாநக​ராட்சி நிதி 50 சதவீத​மும் அரசு மானியம் 50 சதவீத​மும் இந்தத் திட்​டத்​துக்காக ஒதுக்​கப்பட வேண்​டும்.

அதில், அரசு மானியம் ரூ.84 கோடி இதுவரை பெறப்​பட​வில்லை’ என ஆதாரபூர்​வமாக தெரி​வித்​துள்ளது கோவை மாநக​ராட்சி. கோவை மக்களுக்காக பார்த்​துப் பார்த்து ​திட்​டங்களை தரு​வ​தாகச் சொல்​லும் ​முதல்​வர், ​முந்தைய ஆட்​சி​யில் தொடங்​கப்​பட்ட ​திட்​டம் என்று ​பார்க்​காமல் இதை​யும் ​முன்னுரிமை ​கொடுத்து நிறைவேற்​றட்​டும்​!

SCROLL FOR NEXT