தமிழகம்

அரசியல் நாகரிகம் தெரிந்துகொள்ள மோடியை பின்பற்றுக: ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் யோசனை

செய்திப்பிரிவு

எதிர்கட்சிகளை எப்படி நடத்த வேண்டும், மதிக்க வேண்டும், அரவணைத்து செல்ல வேண்டும், ஒன்றிணைந்து செயல்பட வைக்கவேண்டும் என்பது போன்ற நல்ல பல விஷயங்களில் பிரதமரை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பின்பற்றினால் தமிழக அரசியல் நாகரிகமாக இருக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்: "பிரதமர் நரேந்திரமோடியின் 68-வது சுதந்திரதின விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைத்து, இந்தியாவை உலக அரங்கில் முதன்மை நாடாக அழைத்துச்செல்லும் குறிக்கோளுடன் ஆற்றிய உரை இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.

அது ஆழ்ந்த சிந்தனை, தீர்க்கமான முடிவு மக்கள் நலன் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே தெரிகிறது. பிரதமரின் பேச்சு நாட்டிற்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது. உறுதியான பொருளாதார வளர்ச்சியுடன் எதிர்க்காலத்தை வழிநடத்திச்செல்ல அடிப்படையாக அமைந்துள்ளது.

"இந்த நாட்டின் பிரதமராக நான் உங்கள் முன்பு நிற்கவில்லை, உங்களின் பிரதம சேவகனாக நிற்கிறேன்" என்று சொன்ன வார்த்தை ஒரு பிரதமர் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாகும். அவரது பேச்சு மட்டும் அல்ல அவர் செயல்படுத்த உள்ள திட்டங்களிலும் அதை வெளிப்படுத்தி உள்ளார்.

அவருடைய அரசியல் முதிர்ச்சிக்கு எடுத்துக்காட்டுதான் முன்னாள் பிரதமர்களும், அரசுகளும் நாட்டின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டனர் என்ற பாராட்டும், நாட்டை முன்னேற்ற ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று உரையாற்றி இருப்பதுமாகும். வேற்றுமைகளை மறந்து அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும், எதிர்கட்சிகளும் நாட்டின் வளச்சிபாதையில் இணைவதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. எந்த வெற்றிக்கும், பிரதமருக்கோ, அரசுக்கோ மட்டும் பாராட்டுகள் கிடைத்தால் போதாது. எதிர்கட்சிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.

பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மை பலம் பெற்று இருந்தாலும் எதிர்கட்சிகளுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறேன் என்று சொன்ன வார்த்தை மகத்தானது. இப்படிப்பட்ட மாண்புகள் நிறைந்த பிரதமராக நரேந்திரமோடி இந்தியாவை ஆட்சி செய்கிறார். இந்த கருத்து அனைத்து மக்களாலும் பாராட்டப்படும்.

ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளையும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்தவுடன் கருவேப்பிலையைப் போல கூட்டணியில் இருந்து எதிர்கட்சிகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு எதிர்கட்சிகள் மக்கள் மன்றத்தில் பேசினால் வழக்கு, சட்டமன்றத்தில் பேசினால் வெளியேற்றம், இடைநீக்கம் என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்துக்கொண்டு இருக்கிறாரே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இதை என்னவென்று சொல்வது.

சட்டமன்ற எதிர்கட்சிகளை பேசுவதற்க்கு கூட அனுமதிக்காமல் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து தகுதி இல்லை, அருகதை இல்லை என்று சொல்லி அதன் மாண்பையே கேலி கூத்தாக்குகிறார். கூட்டணியில் இருந்த கட்சிகளை கூட ஒன்றிணைத்து செயலாற்ற முடியாமல் இருக்கும் இவர் எங்கே? தன்னை எதிர்த்து நாடுமுழுவதும் போட்டியிட்ட கட்சிகளை அரவணைத்து செல்லும் பாரத பிரதமரின் மாண்பு எங்கே?

நம் மனதில் உதிக்கின்ற எண்ணங்கள் சொல்லாக மாறும், அந்த சொல்தான் செயல்வடிவமாக மாறும். அதைத் தன் உரையின் மூலம் பிரதமர் வெளிப்படுத்தி உள்ளார். இது தான் நிறைகுடம் தளும்பாது என்பதன் பொருளாகும்.

எதிர்கட்சிகளை எப்படி நடத்த வேண்டும், மதிக்க வேண்டும், அரவணைத்து செல்ல வேண்டும், ஒன்றிணைந்து செயல்பட வைக்கவேண்டும் என்பது போன்ற நல்ல பல விஷயங்களில் பிரதமரை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பின்பற்றினால் தமிழக அரசியல் நாகரிகமாக இருக்கும்.

இந்தியாவில் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தும் பிரதமருக்கு தே.மு.தி.க சார்பில் நான் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்" என விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT