நாகப்பட்டினம்: கடலில் பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று அதிகாலையில் அவசர, அவசரமாக கரை திரும்பினர். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை மற்றும் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், நாகை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி, திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை தொடர்ந்து விடிய விடிய காற்றுடன் கூடிய மிதமான மழையும், கனமழையும் இடைவிடாது கொட்டி தீர்த்தது. மேலும் வங்கக் கடலில், காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் இருக்கும் மீனவர்களும் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்ற பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் அவசர, அவசரமாக கரை திரும்பினர். அவர்களது வலையிலும் குறைந்த அளவு மீன்களே கிடைத்தன.
அவற்றை மீன் வியாபாரிகள் காலையிலேயே மழையில் நனைந்தவாறு ஏலம் எடுத்துச் சென்றனர். இதனிடையே, நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தால், மாணவ, மாணவிகள் நிம்மதியடைந்தனர்.