தமிழகம்

கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

செய்திப்பிரிவு

சென்னை: சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. தமிழகம் 1076 கிமீ அளவில் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக உள்ளது. இப்பகுதியில் ஏராளமான புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

விதிகளை மீறியும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் மீனவ சமுதாயம் மற்றும் பிற உள்ளூர் சமுதாயங்களுக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இவர்களை பாதுகாக்கவும், விதிமீறல்களை தடுக்கவும், புதிய திட்டங்களுக்கு உரிய அனுமதி வழங்கவும், கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிப்பாணை - 2019 தொடர்பான விதிகளை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

அதனால் அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசுத்துறை அலுவலர்களுக்கு கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிப்பாணை குறித்த பயிலரங்கம் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தி்ல நேற்று நடைபெற்றது.

இதில் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ராகுல்நாத் பங்கேற்று பயிலரங்கை தொடங்கிவைத்தார். இதில், தேசிய கடலோர நிலையான மேலாண்மை மையம் (NCSCM), தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையம் (NCCR) மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உயர் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். இறுதியில் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT