தமிழகம்

மோசமான வானிலை: சீமான் பயணித்த விமானம் 20 நிமிடங்கள் வட்டமடித்ததால் பரபரப்பு 

கி.மகாராஜன்

மதுரை: மதுரையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக சீமான் வந்த விமானம் தரையிறங்க முடியாமல் சுமார் 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, மதுரையில் நேற்று இரவில் இருந்தே மழை பெய்யத் தொடங்கியது. மாலையிலும் மழை நீடித்தது. இதனால் மதுரை விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவியது. சென்னை - மதுரை விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னையில் பகல் 12 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 1.30 மணிக்கு வர வேண்டிய விமானம் தாமதமாக சென்னையில் 12.45 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மதியம் 2.10 மணிக்கு வந்தது. சென்னையில் மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 3.15 மணிக்கு வர வேண்டிய விமானம், மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு மதுரைக்கு வந்தது. இந்த விமானத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பயணித்தார்.

சீமான் வந்த விமானம் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது மோசமான வானிலை நிலவியது. இதனால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து 20 நிமிடங்கள் விமானம் வானில் வட்டமடித்தபடி இருந்தது. பின்னர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மேலூரில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக சீமான் இன்று மதுரை வந்தார். மேலூர் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ள நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT