திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு | கோப்புப்படம் 
தமிழகம்

தமிழக கிராம பஞ்சாயத்துகளில் 100% மின் ஆளுமை திட்டம் அமல் - திமுக எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் 12,501 (99.8%) கிராமப் பஞ்சாயத்துகள் மின் ஆளுமை வசதியைப் பெற்று, திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக, திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு, மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் எஸ்.பி. சிங் பாகல் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திமுக எம்.பி., கனிமொழி என்.வி.என். சோமு கிராமப் பஞ்சாயத்துக்களில் அமல்படுத்தப்படும் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப உதவியோடு பலனடைந்த கிராமப் பஞ்சாயத்துக்கள் எத்தனை? அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் எஸ்.பி. சிங் பாகல் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: “டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படும் மின் ஆளுமைத் திட்டத்தை நாடு முழுக்க மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. கிராம நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பதவியில் இருப்பவர்களுக்கு பொறுப்பை உணர்த்துதல் ஆகியவற்றை உறுதி செய்து, திறமையான நிர்வாகத்தை தொழில்நுட்ப உதவியுடன் வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் ஒருபகுதியான இ-கிராம சுயராஜ்யத் திட்டத்தின் கீழ், அந்தந்த கிராமப் பஞ்சாயத்துக்களில் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்துடன் பொது நிதி நிர்வாகச் செயல்பாடுகளையும் இணைத்ததன் மூலம், பஞ்சாயத்துகளுக்கு பொருளோ சேவையோ அளித்தவர்களுக்கான கட்டணம் தாமதமின்றி அந்தந்த நாளிலேயே வழங்கப்படுகிறது.

இதே திட்டத்தின் கீழ், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு வாங்கப்படும் பொருட்களை வெளிப்படைத் தன்மையோடு நியாயமான முறையில் வாங்க இ-மார்க்கெட்டிங் என்ற பிரத்யேக செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் இதனால் பெரும் பயனடைவார்கள். இதுதவிர, ஆன்லைன் ஆடிட் என்ற செயல்திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய நிதி ஆணையத்தின் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்களால் பெறப்படும் நிதி எதற்காக, எவ்வளவு, எப்படி செலவிடப்பட்டது என்ற விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை இந்த ஆன்லைன் ஆடிட் திட்டம் உறுதி செய்கிறது.

இதனால் கிராமப் பஞ்சாயத்துகளின் நிதி மேலாண்மை மேம்படும். அந்தந்த கிராமங்களில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஆதாரங்கள், செலவுகள் பற்றி உள்ளூர் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தனியாக ஒரு போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமை சபைக் கூட்டங்களை அர்த்தமுள்ள வகையிலும், பயனுள்ள வகையிலும் நடத்த பஞ்சாயத்து நிர்ணய் என்ற செயலி உதவுகிறது.

இந்தத் திட்டங்களை செயல்படுத்த ஆகும் செலவுகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்படுவதில்லை. தேசிய தகவல் மையச் சேவைகள் நிறுவனத்துக்கு நிதி நேரடியாக வழங்கப்படுகிறது. அவர்களே இதற்கான செலவுகளைச் செய்கிறார்கள்.தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் 12,501 (99.8%) கிராமப் பஞ்சாயத்துகள் மின் ஆளுமை வசதியைப் பெற்று, திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன, என்று பதிலளித்துள்ளார்.

SCROLL FOR NEXT