புதுச்சேரி: சாத்தனூர், வீடுர் அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் உள்ள கிராமப்பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் நகரப்பகுதிகள் வெள்ளக்காடானாது. அதற்கு ஒரே நாளில் 48.4 செ.மீ மழை பொழிந்ததும் ஒரு காரணம். அதைத்தொடர்ந்து சாத்தனூர், வீடுர் அணைகள் திறப்பால் புதுச்சேரியில் கிராமப்பகுதிகள் வெள்ளக்காடானது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பொருள்கள் இழப்பால் மக்கள் தவிப்பில் உள்ளனர்.
அதிலிருந்து தற்போதுதான் கிராமப்பகுதிகள் மீண்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று முதல் புதுச்சேரி, காரைக்காலில் மழைபொழிவு உள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை வரை 5 செமீ மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆட்சியர் குலோத்துங்கன் இன்று காலை கூறுகையில், சாத்தனூர் மற்றும் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் அதிகம் திறக்கப்படுவதன் காரணமாக வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. அதனால், சங்கராபரணி மற்றும் தென் பெண்ணை ஆறு அருகில் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார். இன்றும் புதுச்சேரியில் மழை பொழிவு உள்ளது. தொடர்ந்து மின்தடையும் ஏற்பட்டுள்ளது.