தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மேயர் மனைவிக்கு விற்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், சொத்தின் யுடிஆர் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சை அருளானந்தம்மாள் நகரில் நகராட்சிப் பள்ளி கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடம் மாநகராட்சி ஆணையர் பெயரில் இருந்தது. நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடி. இந்நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் கடந்த 2022-ல் பொன்னுமணி என்பவர் பெயருக்கு மாற்றப்பட்டு, பட்டாவும் பெறப்பட்டிருந்தது.
மாநகராட்சி நிலத்தை மீட்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அந்த இடம், தஞ்சை மேயர் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேயர், ஆணையர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் மாநகராட்சி ஆவணங்களில் மோசடி செய்து, மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை வீட்டடி மனையாக மாற்றி விற்றுள்ளனர்.
மாநகராட்சி நிலங்களைப் பாதுகாக்கும் கடமை மேயர் மற்றும் ஆணையருக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றாமல், மாநகராட்சி நிலங்களை தனியாருக்கு விற்றுள்ளனர். தஞ்சை மேயர் ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர். இதனால் நிலமோசடி தொடர்பாக போலீஸார் விசாரித்தால், நியாயம் கிடைக்காது. எனவே, இந்த மோசடி தெடார்பாக வழக்கு பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்து, "வழக்கின் முக்கியத்துவம் கருதி, தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொன்னுமணி, மேயரின் மனைவி சங்கீதா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். இவர்கள் வழக்கு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட இடத்தின் யுடிஆர் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.