நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்  
தமிழகம்

மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை

கரு.முத்து

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கெனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறி உள்ளது. இது மேலும் வலுவடைந்து டெல்டா கரையை நோக்கி நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வங்கக் கடல் பகுதியில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிமீ வரை வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் பட்டினச்சேரி துவங்கி கோடியக்கரை வரை உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3500-க்கும் நாட்டு படகுகள் கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் அந்தந்த படகு நிறுத்தும் தளத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் மற்றும் டீசல் ஆகியவை நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT