சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் நடத்தப்பட்ட தணிக்கைக்கு, அந்த துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர்கள் ஜெய்சங்கர் (தணிக்கை-1), ஆனந்த் (தணிக்கை-2) ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் சூரியசக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊரக நலிவுற்றோரில் 7.42 சதவீதம் பேர் மட்டுமே பயனடைந்திருப்பதால், பாதிப்புற்ற ஊரக நலிவுற்றோருக்கு நிரந்தர வீடுகள் வழங்குவதில் இந்த திட்டம் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மேலும், 2017-21-ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட 27 கிராம ஊராட்சிகளில் 135 பேருக்கு கிராம சபைகளின் ஒப்புதல் இல்லாமலேயே வட்டார வளர்ச்சி அலுவலர்களால் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அத்துடன், இந்த காலக்கட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்ட 88 பயனாளிகள், அவற்றை கூடுதல் அறைகள், தரை மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றைக் கொண்ட பெரிய குடியிருப்புகளாக விரிவுபடுத்தி இருந்தனர். இதன் மூலம், இவர்கள் நலிவடைந்த ஊரக மக்கள் இல்லை என்பதும், வசதி வாய்ந்த பயனாளிகள் என்பதும், இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி இருந்ததும் தெரியவந்தது.
கோயில் சொத்துகள்: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டிடங்களும் உள்ளன. இந்த கட்டிடங்களுக்கு 2022 ஜுலை 1 முதல் 2023 மார்ச் 21-ம் தேதி வரை ரூ.117.63 கோடி வாடகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. கோயில் சொத்துகள் தொடர்பாக துறை நிர்வாகம் சரியாக இல்லாததால், கோயில் சொத்துகளுக்கு இழப்பு ஏற்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதையடுத்து, 2022 மே மாதம் இது தொடர்பாக ஒரு இணக்கத் தணிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், அறநிலையத் துறை போதிய ஆவணங்களை வழங்கவில்லை.
மேலும், துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் செலவழிக்காமல், மொத்தம் ரூ.33,183 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இதில், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு, செலவிடப்படாத துறைகளாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகள் திகழ்கின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.