சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள நந்தவனம் பாரம்பரிய பூங்கா, உதகை தேவாலாவில் உள்ள பூந்தோட்டம் ஆகியவற்றை மேம்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகம் ரூ.170 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
மூலதன செலவுகளுக்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவி வழங்கும் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 2 முக்கியமான சுற்றுலா திட்டங்களுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ரூ.169.9 கோடி ஒதுக்கியுள்ளது. இதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள நந்தவனம் பாரம்பரிய பூங்காவும், உதகை தேவாலாவில் உள்ள பூந்தோட்டமும் மேம்படுத்தப்படும்.
மாமல்லபுரம் நந்தவனம் பாரம்பரிய பூங்காவில், ரூ.99.67 கோடி செலவில், தோட்டப் பூங்கா, கலாச்சார மற்றும் செயல்பாட்டு தளம், நிகழ்வுகள், கூட்டங்களுக்கான திறந்தவெளி அரங்கம் ஆகியவை அமைக்கப்படும்.
இதேபோல், நீலகிரி மாவட்டம் உதகை தேவாலாவில் பூந்தோட்டம் அமைப்பதற்கு ரூ.70.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதகை, வயநாடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு மாற்றாக அதிக மழைப் பொழிவுடனும், அழகான சமவெளி பகுதியுடனும் சுற்றுலாவுக்கு உகந்த இடமாக தேவாலா அமைந்துள்ளது.
தேவாலாவில் அமைக்கப்படும் பூந்தோட்டத்தில் பல்வேறு பிராந்தியங்களை சேர்ந்த பலவகை பூக்களுடன் துலிப் மற்றும் கண்கவர் பூக்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மலையேற்ற பயிற்சி, பறவைகளை கண்டு ரசிக்கும் பகுதிகள், கண்காட்சி அரங்குகள், துணிச்சலான சாகசப் பயணங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகள், தொங்கு பாலங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்படும்.
இவைதவிர, மாமல்லபுரத்தில் ரூ.574 கோடி மதிப்பில் பொது - தனியார் கூட்டு திட்டங்களை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டள்ளது. இதன்படி, சில்லறை விற்பனைக் கடைகள், உணவகங்கள், ஆரோக்கிய மையங்கள், நிகழ்ச்சிகளுக்கான தளங்கள், ஒலி, ஒளி நிகழ்ச்சிகள், சாகச விளையாட்டுகள், கடல் உணவகங்கள், சுற்றுச்சூழலுக்கேற்ற குடில்கள், பாரம்பரிய கடற்கரை ஓய்வு விடுதிகள் ஆகியவை அமைக்கப்படும். இதன்மூலம், 2,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தேவாலாவில் ரூ.115 கோடி மதிப்பில் சமவெளிப் பகுதியில் ரோப்வே மூலம் இயற்கை சூழலை காண்பதற்கான வசதிகள், மலை உச்சியில் சுற்றுலா கூடாரங்கள் ஆகியவை அமைக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 2,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.