சென்னை: சென்னை கிளாம்பாக்கம் அருகே முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் ரூ.42.70 கோடியில் தனியார் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தங்கும் இடங்கள், ஒப்பனை அறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன், 150 பேருந்துகள் நிறுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட பேருந்துகள் இங்கு நிறுத்தப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே 16 ஏக்கர் பரப்பில் ரூ.15 கோடியில் கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் விளக்க மையம், அகழிகள், மழைநீர் குளங்கள், உயர்மட்ட நடைபாதை, மரத்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, சிலைகள் பூங்கா, திறந்தவெளி அரங்கம், கண்காட்சி மேடை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்துக்கு தினமும் வரும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள். தகுந்த மருத்துவர்கள், செவிலியர்களை கொண்டு இந்த மையத்தை திறம்பட செயல்படுத்த அப்போலோ மருத்துவ குழுமம் முன்வந்துள்ளது.
சிஎம்டிஏ சார்பில் ரூ.58.70 கோடியில் அமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிறுத்துமிடம், காலநிலை மாற்ற பூங்கா, மருத்துவ மையம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, தலைமைச் செயலர் முருகானந்தம், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.