தமிழகம்

திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் தூண்கள் மாயம்: பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: அபிராமியம்மன் கோயிலில் தூண்கள் திருடப்பட்டுள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.

திண்டுக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற அபிராமியம்மன் கோயிலில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நேற்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பல நூறு ஆண்டுகள் முற்பட்ட கோயில்கள் புராதனமானவை என்றும், 100 ஆண்டுகள் வரலாறு கொண்ட கோயில்கள் பழமையானவை என்றும் அழைக்கப்படுகின்றன. புராதனக் கோயில்களை அறநிலையத் துறையோ, அறங்காவலர்களோ புனரமைப்பு செய்ய முடியாது. புராதனக் கோயிலை சட்டரீதியாக புனரமைப்பு செய்யும் உரிமை தொல்லியல் துறைக்கு மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருப்பணி என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது. அதில், 60 சதவீதம் போக, மீதமுள்ள பணத்தில்தான் திருப்பணிகள் நடக்கின்றன. கோயில் நிதியில் ஊழல் செய்வதைப் பார்க்கும்போது வேதனை ஏற்படுகிறது.

திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலை புனரமைப்பு செய்யவில்லை; அதைப் புதுப்பித்துள்ளனர். அப்போது கோயிலில் இருந்த தூண்கள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.

SCROLL FOR NEXT