சென்னை: ராம்கோ சூப்பர்கிரீட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்மிகு பொறியாளர் விருது' வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
கட்டுமானத்திலும், கட்டமைப்பிலும் சிறப்பான முறையிலும், தனித்துவத்துடனும் செயலாற்றி வரும் பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்மிகு பொறியாளர் விருது’, ‘வளர்மிகு பொறியாளர் விருது’, ‘திறன்மிகு பொறியாளர் விருது - 2024’ வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது.
ரினாகான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து வழங்கின. 19 பேருக்கு சீர்மிகு பொறியாளர் விருது, 7 பேருக்கு திறன்மிகு பொறியாளர் விருது, 36 பேருக்கு வளர்மிகு பொறியாளர் விருது என மொத்தம் 62 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உதவி துணைத் தலைவர் (பிராண்ட் நிர்வாகம்) ரமேஷ் பரத், ரினாகான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ் தலைமை செயல்பாட்டு அலுவலர் வெங்கடேஷ் பக்காலா, டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக இணைப் பதிவாளர் டாக்டர் எம்.கணேசன் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
விழாவில் ரமேஷ் பரத் பேசியதாவது:‘இந்து தமிழ் திசை’யுடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சீர்மிகு பொறியாளர் விருதுகளை வழங்குவதில் ராம்கோ நிறுவனம் பெருமை கொள்கிறது. 1962-ல் தினமும் 200 டன் சிமென்ட் உற்பத்தி செய்யக்கூடிய சிறு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ராம்கோ நிறுவனம், தற்போது 23 மில்லியன் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. இதற்கு அடிப்படை காரணமாக இருப்பவர்கள் கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் கொத்தனார்கள்.
சாலை வசதி, பெரிய அணைகள், பெரிய பாலங்கள், சுரங்கப் பாதைகள் போன்றவைதான் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம். இதற்கு அடிப்படையாக இருப்பவர்கள் கட்டுமானப் பொறியாளர்கள். கட்டுமானத் துறையில் புதுப்புது தொழில்நுட்பங்களைப் புகுத்த எங்கள் நிறுவனம் ஒருபோதும் தயங்குவதில்லை. அதற்கு எவ்வளவு செலவானாலும், அந்த தொழில்நுட்பங்களை எங்கள் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தி விடுவோம். தரம், நம்பிக்கை-இவைதான் எங்கள் தாரக மந்திரம். கட்டுமானத் துறைக்கு 19 வகையான சிமென்ட்களை தயாரித்து வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ரினாகான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ் தலைமை செயல்பாட்டு அலுவலர் வெங்கடேஷ் பக்காலா பேசும்போது, ‘‘கடந்த 15 ஆண்டுகளில் கட்டுமானத் துறை மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுவருகிறது. இத்துறையில் நுகர்வோர் புதிய தொழில்நுட்பங்களை எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில், கட்டுமானப் பொறியாளர்களுக்கு விருது வழங்கும் முயற்சி பாராட்டுக்குரியது. கட்டுமானத் துறை வளர்ச்சியில் பொறியாளர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் பொறியாளர்களைப் பாராட்டுகிறோம்’’ என்றார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் பயோ-டெக்னாலஜி துறையின் தலைவர் பேராசிரியை ராஜேஷ்வரி பேசும்போது, ‘‘1998-ம் ஆண்டு பொறியியல் கல்லூரியாகத் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம், 2003-ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்று, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தேசிய தர அங்கீகாரக் கவுன்சில் (நாக்) ‘ஏ’ தர அங்கீகாரம் பெற்ற எங்கள் பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளும் தேசிய தர வாரியத்தின் (என்பிஏ) அங்கீகாரம் பெற்றிருக்கின்றன.
கட்டுமானத் துறைக்கு தேவையான, உயர்தர கட்டுமானப் பொறியாளர்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்துகிறோம்" என்றார்.
விருது தேர்வுக் குழுவில் இடம்பெற்ற சென்னை சிஎஸ்ஐஆர் கட்டுமானப் பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் என்.ஆனந்தவள்ளி, பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் தலைமைப் பொறியாளர் ரவீந்திர சுப்பையா, அண்ணா பல்கலை. பூகம்பம் மற்றும் மண் கட்டமைப்புப் பிரிவுத் தலைவர் பேராசிரியை டாக்டர் கே.பி.ஜெயா ஆகியோர், விருது தேர்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றுப் பேசும்போது, ‘‘இந்து தமிழ் திசை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு அன்பாசிரியர் விருதும், அறிவியலில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு நாளைய விஞ்ஞானி விருதும் வழங்கப்படுகின்றன. அதேபோல, பொறியியல் துறையில் சிறந்து விளங்குவோருக்கு சீர்மிகு பொறியாளர் விருது வழங்கப்படுகிறது. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் பொறியாளர்கள் கட்டுமானங்களில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். உலகத் தரத்திலான தொழில்நுட்பங்களைப் புகுத்தி, அந்த அனுபவங்களைஅடுத்த ஆண்டு நடைபெறும் விழாவில் பகிர்ந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.
‘இந்து தமிழ் திசை’ தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம் பேசும்போது, ‘‘கரோனா காலகட்டத்தில் ஆசிரியர்களும், மருத்துவர்களும் சிறப்பாகப் பணியாற்றினர். அத்தகைய ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் அன்பாசிரியர் விருதையும், மருத்துவ நட்சத்திரம் விருதையும் ‘இந்து தமிழ் திசை’ வழங்கி வருகிறது.
அந்த வழியில், சிறந்த பொறியாளர்களைக் கவுரவிக்க சீர்மிகு பொறியாளர் விருது வழங்கப்படுகிறது. எந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிதான். அதற்கு அடித்தளமாகத் திகழ்பவர்கள் கட்டுமான பொறியாளர்கள். கட்டுமானத்துறையில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார். ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் துணைத் தலைவர் (விற்பனை) கே.கே.சதாசிவம் நன்றி கூறினார். விழாவில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிவாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் சங்க மாநிலத் தலைவர் தங்க.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.