சென்னை: அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைப்பவர்களின் மதவெறி, சாதி வெறி எண்ணம் இந்த பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் உரம் பெற்றுள்ள மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது, இந்த ஸ்டாலின் இருக்கும்வரை உங்களால் அதை நிறைவேற்றவும் முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை குடிநீர் வாரியம சார்பில், தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் முதல்கட்டமாக, 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 100 தூய்மை பணியாளர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், 30 நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தந்தை பெரியார், அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் ஆகியோர் காண நினைத்த சமத்துவ சமுதாயத்தை அமைப்பதற்கான பாதையில் திராவிட மாடல் ஆட்சி நடைபோடுகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார மேம்பாட்டை அடைய, ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில், ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ தொடங்கப்பட்டது. தூய்மைப்பணியாளர் நலனுக்காக நலவாரியத்தில் கடந்த 3 ஆண்டுகளில், 3,06,775 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மருத்துவ காப்பீட்டு அட்டையில் உள்ள பிரச்சினை களையப்பட்டு தற்போது, 35 ஆயிரம் உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கப்படுகிறது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலநிலைக்கு, முழுமையாக முற்றுப்புள்ளி வைப்பதே நமது குறிக்கோளாகும். சமூகநீதி வழியாக, சமத்துவ சமுதாயத்தை படைக்க பாடு படுகிறோம். நமது லட்சிய பயணத்தில் ஒருசில தடைகள், இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. உடனே அதை மட்டும் சிலர் பெரிதுபடுத்தி, அரசிய லாக பார்க்கிறார்கள்.
ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தையும், அரசின் செயல்பாடுகளையும் தெரிந்து கொள்ளாமல், தெரிந்திருந்தாலும் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்கள் மதவெறி – சாதி வெறி எண்ணம் இந்த பெரியார் மண்ணில், அம்பேத்கர் கொள்கைகள் உரம் பெற்று இருக்கும் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது, இந்த ஸ்டாலின் இருக்கும்வரை உங்களால் அதை நிறைவேற்ற வும் முடியாது.
பெரியார், அம்பேத்கர் கொள்கை வழி நடக்கும் அரசும், சமூகத்தில் நிலவும் இடர்பாடுகளை நீக்கி, சமூகத்தைப் பிளவுபடுத்தும் சக்திகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்டி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீரும். இதுதான் தந்தை பெரியார், அம்பேத்கர் மீது நாங்கள் எடுக்கும் உறுதிமொழியாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச் சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, மா.சுப்பிரணியன், பி.கே.சேகர்பாபு, மா.மதிவேந்தன், மேயர்ஆர்.பிரியா, தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந் தகை, விசிக தலைவர் திருமாவளவன், துணைமேயர் மகேஷ் குமார், தலைமை செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.