தமிழகம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலாவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஷோலூர் மட்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கேரள மாநிலம் வாளையாரைச் சேர்ந்த மனோஜ். சயான், தீபு, சந்தோஷ் சாமி, சதீஷன் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரையும் விசாரிக்க அனுமதி கோரி இந்த வழக்கில் கைதான தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீலகிரி மாவட்ட நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கியது. பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தீபு, சதீஷன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.அதில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பிறகு நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளையில் எஸ்டேட்டில் இருந்து மாயமான பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும் என்றும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும், முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்டுவிட்டதாகவும்” தெரிவித்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதி பி. வேல்முருகன் முன்பாக ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் இந்த வழக்கில் பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை எதிர்தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும், என வாதிடப்பட்டது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத்குமார், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது, என்றார்.அதையடுத்து நீதிபதி, அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி தற்போது முதல்வராக பதவியில் இல்லை என்பதால் அவரை எதிர்தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்கக்கூடாது என கருத்து தெரிவித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி பி.வேல்முருகன், நீலகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரையும் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT