புதுடெல்லி: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19-ம் தேதி கள்ளச் சாராயம் குடித்த 69 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்ப துரை, பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ வால்பாறை டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ண குமார், பி.பி.பாலாஜி அமர்வு, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த நவ.20-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது தமிழக சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை சரியாகத் தான் விசாரித்து வந்தனர். கள்ளச் சாராய வியாபாரிகள் கூண்டோடு கைது செய்யப் பட்டு, பலர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கை சிபிஐ மீண்டும் விசாரித்தால், விசாரணை இன்னும் தாமதமாகும். எனவே, தமிழக போலீஸாரே தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் போது, தங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று கூறி, ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அதிமுக, பாமக, பாஜக வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.