தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 70 வார்டுகளில், 60 சதவீதத்துக்கு மேல் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலைகளின் இந்த நிலையே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக உள்ளதாக மாநகரவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து குரோம்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் வீ.சந்தானம் கூறியது: தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்பட்டு ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்தும் வேலைகள் எதுவும் மக்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. பருவமழைக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், மழைநீர் கால்வாயில் இன்னும் அடைப்புகள் எடுக்கப்படவில்லை; குண்டும், குழியுமான சாலைகள் செப்பனிடப்படவில்லை.உதாரணமாக, தாம்பரம் மாநகராட்சி முழுவதும் உள்ள பிரதான சாலைகள், உட்புற சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ள.
குரோம்பேட்டை 3-வது மண்டலம் ராதா நகர், வஉசி சாலை, ராதா நகரையும் - ஸ்டேட் பேங்க் பகுதியையும் இணைக்கும் சாலை, சிஎல்சி, ஒர்க்ஸ் ரோடு, ஸ்டேட் பாங்க் முதல் குறுக்கு தெரு, விவேகானந்தா வித்யாலயா பள்ளி சாலையான மகாதேவன் தெரு, இந்த தெருக்கள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளன.
இச்சாலைகளில் குறைந்தபட்சம் “பேட்ச்-ஒர்க்” வேலையையாவது பார்த்திருக்க வேண்டும். ஆகவே, முதல்வர் இதில் தலையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் கூறியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்ட மைப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 19.74 கோடி மதிப்பீட்டில் 195 தார் சாலைகள் மற்றும் 58 சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் என மொத்தம் 253 உட்புறச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 80 சதவீதம் முடிந்துள்ளது. “பேட்ச்-ஒர்க்” பணியும் நடந்து வருகிறது என்றனர்.