செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தற்போது பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டு வள்ளிபுரம், வாயலூர் தடுப்பணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது உபரிநீர் வெளியேறி கடலில் கலந்து வருகிறது. இந்நிலையில், வாயலூர் பகுதியில் உள்ள தடுப்பணை நிரம்பியதாலும் தொடர்ந்து மழை பெய்ததாலும் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்து தடுப்புச்சுவரை தாண்டி தண்ணீர் கடலில் வீணாக கலக்கும் நிலை உள்ளது.
இதனால், வாயலூர் பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பனங்காட்டுச்சேரியில் தடுப்பணை அமைக்க வேண்டும் என கரையோர கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே பொதுப்பணித்துறை மற்றும் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பில் தடுப்பணை அமைப்பதற்காக இப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் கிங் உசேன் கூறியதாவது: நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பாலாற்றில் தான் முதலில் தடுப்பணை அமைக்கப்பட இருந்தது. இருப்பினும், வாயலூர் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. இதேபோல், தமிழக அரசு சார்பில் வல்லிபுரம் பாலாற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டது. ஆனாலும் தண்ணீர் அதிகளவில் கடலில் வீணாக கலந்து வருகிறது. மேலும், பனங்காட்டுச்சேரி பாலாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பல இடங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதனால், அங்கு தடுப்பணை அமைப்பது அவசியமாகிறது. இதன்மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தடையின்றி கிடைக்கும். விளை நிலங்களும் பாசன வசதி பெறும். கரையோரங்களில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
இதுகுறித்து, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தனபால் கூறியதாவது: பாலாற்றில் 7 இடங்களில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை அறிவித்த அதிமுக, வல்லிபுரம், பழையசீவரம் ஆகிய பகுதிகளில் தடுப்பணை அமைத்தது. இதன்மூலம், மேற்கண்ட பகுதியின் இருகரையோரங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். எனவே, பனங்காட்டுச்சேரி உட்பட பாலாற்றில் தடுப்பணை அமைக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாலாற்றில் தடுப்பணை அமைக்கும் திட்டப்பணிகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. பனங்காட்டுச்சேரி பகுதியில் அணுசக்தி நிர்வாகத்துடன் இணைந்து தடுப்பணை அமைப்பது குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.