ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 
தமிழகம்

ஒகேனக்கல் காவிரியாற்றில் 23 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நீர்வரத்து: பரிசல் இயக்க, அருவிகளில் குளிக்க தடை

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை அளவீட்டின் போது நீர்வரத்து 5,500 கனஅடியாக பதிவானது. இந்நிலையில் இன்று (டிச.3) காலை 6 மணி அளவீட்டின் போது நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து இருந்தது. தொடர்ந்து, காலை 8 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாகவும் 9 மணி அளவீட்டின்போது 23 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்து இருந்தது.

ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளிலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கவும், ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

SCROLL FOR NEXT