புதுச்சேரி: புயல் மீட்பு பணியில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு தீயணைப்பு வீரர்களுக்கு துறை நிர்வாகம் உடனடியாக உதவ கோரிக்கை வலுத்துள்ளது. அதேபோல் புதுச்சேரியில் உள்ள 14 தீயணைப்பு நிலையங்களுக்கு வெறும் இரண்டே நிலைய அதிகாரிகள் இருப்பதால் வீரர்கள் தவித்து வருகின்றனர்.
பேரிடர் நிகழ்ந்தால் புதுச்சேரியில் களத்தில் முதலில் இருப்பது தீயணைப்பு வீரர்கள்தான். சாலையில் அடிக்கடி விழும் மரங்களை அப்புறப்படுத்துதல், வாய்க்காலில் விழுந்த கால்நடைகளை மீட்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, தீயணைப்பு பணி உட்பட பல பணிகளில் தீயணைப்பு வீரர்கள்தான் முதலில் களத்துக்கு வந்து ஈடுபடுவார்கள்.தற்போது ஏற்பட்ட புயல் வெள்ள மீட்பு பணியிலும், மரங்களை அகற்றும் பணிகளை செய்து வருகின்றனர்.
இதில் தீயணைப்பு வீரர்கள் இருவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தீயணைப்பு வீரர்கள் வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரி புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் வீரர்கள் அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறோம். பத்துக்கண்ணு பகுதியில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் வீரர் வசந்த் ஈடுபட்டிருந்தார். அப்போது அறுவை மிஷின் எதிர்பாராத விதமாக கையில் பட்டு படுகாயம் அடைந்தார். அதையடுத்து தனியார் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு உள்ளார்.
அதேபோல் காலாப்பட்டில் வீரர் பெரியண்ணன் மரக்கட்டைகள் சரிந்து விழுந்தபோது அவர் கை மதில் சுவரில் மாட்டி படுகாயம் அடைந்தார். அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை நடந்துள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற மீட்பு பணிகளில் காயம் அடைவோருக்கு அரசு உடனடியாக உதவிக்கரம் நீட்டுவதில்லை. நாங்கள் செல்வு செய்து பல மாதங்களுக்கு பிறகே அதற்கான தொகை எங்களுக்கு கிடைக்கும். அந்த நிலைமாறி, உடனடியாக உதவி கிடைத்தால் மீட்பு பணியில் இருப்போருக்கு உதவியாக இருக்கும்.
நாங்கள் காயம் அடைந்துள்ளோம் என்ற தகவலை அரசு தரப்புக்கு நிலைய அதிகாரி தான் தெரிவிக்கவேண்டும். புதுச்சேரியில் 14 தீயணைப்பு நிலையங்களில் 2 நிலைய அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். பல நிலையங்களுக்கு இவர்களே பொறுப்பு வகிக்கின்றனர். உதவி கிடைக்க காலதாமதம் ஆவதற்கு இதுவும் காரணம். இந்த முறையாவது பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு அரசும், துறையும் உடன் உதவி மக்களுக்கு உதவும் எங்களை காக்க வேண்டும்,” என்றனர்.