தமிழகம்

ஜாமீன் பெற்ற உடனே அமைச்சரானது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜாமீன் பெற்ற உடனேயே அமைச்சராக பதவியேற்றது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத் துறையால் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து. 472 நாட்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து கடந்த செப்டம்பர் 26-ம் தேதி விடுதலையானார். ஒருநாள் இடைவெளியில் 28-ம் தேதி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டு, 29-ம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான பண மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வித்யாகுமார் என்பவர், அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்: அமைச்சர் பதவியில் இல்லை என்று கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி. ஜாமீன் கிடைத்ததும் ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகிவிட்டார். இதனால், அமைச்சரை எதிர்த்து சாட்சியம் கூற சாட்சிகள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிபதிகள்: மனுதாரரின் குற்றச்சாட்டு நியாயமானதுதான். அமைச்சர் பதவியில் இல்லை என்றதால் ஜாமீன் கொடுத்தோம். ஜாமீன் பெற்ற உடனேயே அமைச்சராக பதவியேற்றது ஏன்? குற்றம் சாட்டப்பட்டவரே அமைச்சராகி விட்டால் சாட்சிகள் எப்படி பயமின்றி சாட்சியம் அளிப்பார்கள்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, வழக்கறிஞர் ராம்சங்கர்: செந்தில் பாலாஜி அமைச்சர் ஆனதால் விசாரணை பாதிக்கப்படுகிறது என்றால். அமலாக்கத் துறையே நீதிமன்றத்தை நாடியிருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. முகாந்திரம் இல்லாத இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு வாதம் நடந்தது. ஆனால், மனுவை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிபதிகள். “செந்தில் பாலாஜி மீண்டும் முக்கிய துறையின் அமைச்சராக பதவியேற்றுள்ளதால் விசாரணை பாதிக்கும் என மனுதாரர் தனது நியாயமான அச்சத்தைத்தான் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வழக்கில் சாட்சியங்களுக்கு அழுத்தம் உள்ளதா என்று விசாரிக்கப்பட வேண்டும். ஜாமீன் பெற்ற உடனேயே அமைச்சராக பதவியேற்றது ஏன் என்று செந்தில் பாலாஜியிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும்” என்று அவரது தரப்பு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தி விசாரணையை டிசம்பர் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT