விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்த அதி கனமழையால் பல்வேறு இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்துவருகின்றனர்.
வங்கக் கடலில் கடந்த 4 நாட்களாக அனைவருக்கும் போக்கு காட்டி அமைதியாக இருந்து வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது தன் கோரத்தாண்டவத்தைக் காட்டி விட்டது.
அந்த அளவுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை கொட்டி தீர்த்துள்ளது. நேற்று காலை ஆரம்பித்த மழை தற்போது வரை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. இதேபோல் வானூர், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது.
இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 50 செமீட்டர் அளவுக்கு எப்போதுமே மழை பெய்தது இல்லை. விழுப்புரம் நகரில் வரலாறு காணாத மழைப் பொழிவை ஃபெஞ்சல் புயல் தந்தது. விழுப்புரம் நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. அனைத்து பகுதிகளிலுமே குடியிருப்புப் பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம் நகரத்தை பொறுத்த வரை எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. விழுப்புரம் நகரில் உள்ள கெளதம் நகர், ஸ்ரீராம் நகர், சுபஸ்ரீ நகர், சுதாகர் நகர், சேலைமஹால் பின்புறம் உள்ள விஐபி கார்டன், மகாராஜபுரம் தாமரைக்குளம், ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சுதாகர் நகர், ஆசாகுளம், சுமையா கார்டன், ஹைவேஸ் நகர், ராஜேஸ்வரி நகர், சரஸ்வதி அவென்யூ, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருச்சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதோடு, வாகனங்களும் மூழ்கியதால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே நேற்று மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் குடிநீரோ, அத்திவாசிய தேவைக்கான தண்ணீரோ கிடைக்காமல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு கடும் இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 10-ம் தேதியே இந்து தமிழ் நாளிதழ் ; 'கோலியனூரான் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல்; வர இருக்கும் வடகிழக்கு பருவ மழையில் திக்கித் திணறப்போகிறதா விழுப்புரம் நகரம்?' என சிறப்பு கட்டுரை வெளியிட்டது. இதையடுத்து 2 நாட்கள் மட்டும் கோலியனூரான் வாய்க்காலில் தூர்வாரப்பட்டது. அப்போதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கம், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு மற்றும் நீர்நிலைப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் விழுப்புரத்தான் வாய்க்காலை முழுமையாக அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோலியனூரான் வாய்க்கால், விழுப்புரத்தான் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் மருதூர் ஏரிக்கும், கோலியனூர் ஏரிக்கும் செல்ல வழி செய்யாதவரையில் வரும் காலங்களில் இதே நிலை தொடரும் என்பதில் சந்தேகமில்லை.