விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் வீடுர் அணை திறக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாணவ - மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
பெஞ்சல் புயல் மற்றும் அதனால் பெய்யக்கூடிய கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. குறிப்பாக மழையினால் பாதிக்கப்படுபவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 850 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டது.
மேலும் மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாக்களில் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார்படுத்தப்பட்டு அம்மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
நேற்று இரவு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் இடை விடாமல் கொட்டிய மழையால் சாலையெங்கும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. நேற்று காலை முதல் விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் துண்டிக்க மின் விநியோகம், சுமார் 30 மணி நேரமாக மின்சாரம் வழங்கப்படவில்லை. விக்கிரவாண்டி அருகே மேலகொந்தை கிராமத்தில் வெள்ளம் சூழந்துள்ளதால் அக்கிராம மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். விழுப்புரம் பேருந்து நிலையம் வழக்கம் போல வெள்ளத்தில் மிதக்கிறது.
மரக்காணம் அருகே கிராமங்களுக்குள் புகுந்த வெள்ள நீர்; மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது காணி மேடு, மண்டகப்பட்டு, கொள்ளுமேடு, அசப்போர், நல்லம்பாக்கம், ராய நல்லூர், கந்தம்பாளையம் நகர் ஆகிய கிராமங்கள். இந்த கிராமங்களுக்கு இடையில் செல்கிறது ஓங்கூர் ஆறு. ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு ஆத்தங்கரையோரம் உள்ள கிராமங்களான காணி மேடு, மண்டகப்பட்டு, ராய நல்லூர், அசப்போர் ஆலத்தூர் உள்ளிட்ட கிராமங்களிலும் புகுந்துள்ளது. திண்டிவனம்- மரக்காணம் சாலையில் வேரோடு சாய்ந்த புளியமரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வீடூர் அணை திறப்பு: திண்டிவனம் அருகே வீடூர் அணை அதன் கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் (32அடி)487.52 மில்லியன் கன அடியை(30.5அடி) நிரம்பியது அணைக்கு வினாடிக்கு 36, 203 நீர்வரத்து வரத் தொடங்கியது. இதையடுத்து அணை கண்காணிப்பு அதிகாரிகள் சுற்றுப்புற கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படிநேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் அபாய சங்கு ஒலி எழுப்பினர். நேற்று அதிகாலை 3:30 மணி அளவில் அணையில் 9 கதவுகளையும் திறந்து நீர் வரக்கூடிய 36 ஆயிரத்து 203 கன அடி உபரி நீரை அணையிலிருந்து வெளியே திறந்து விட்டனர்.
அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக சங்கராபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்பரித்துக் கொண்டு வெளியேறியது. மரக்காணம், கோட்டகுப்பம் பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணிவரை மழை அளவு ( சென்டி மீட்டரில்)
விழுப்புரம் ; 27.5
விக்கிரவாண்டி; 24.0
வானூர்; 24.0
திண்டிவனம்; 37.4
மரக்காணம்;23.8
செஞ்சி; 25.5
மேல் மலையனூர்; 22.9
கண்டாச்சிபுரம்; 17.9
திருவெண்ணைநல்லூர்; 7.8
மொத்த மழை அளவு; 485.0
சராசரி மழை அளவு; 23.98