சேலம்: “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு கடந்த அக்டோபர் மாதத்தில் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்போது ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்,” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பூத்துக்கு 10 நிர்வாகிகளை நியமித்து, அவர்கள் தலா 100 வாக்குகளை சேகரிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திமுக ஆட்சியில் நடந்து வரும் சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி ஏற்றம், சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு குறித்து மக்களிடம் எடுத்துரைத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் உள்பட முக்கிய ஆலோசனைகள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் நாய்க்கன்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதித்ததாக அந்தப் பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த சுரங்கம் அமைக்க திமுக அரசு கடந்த அக்டோபர் மாதத்தில் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்போது ரத்து செய்ய வேண்டும் என கடிதம் எழுதி முதல்வர் ஸ்டாலின் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்து சட்டம் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி வாடகைக் கட்டடங்களுக்கு 18 சதவீதம் வசூலிக்கப்படுவதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரோனா தொற்று சரிவில் இருந்து வியாபாரிகள் மீண்டு வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பால் கடும் தொழில் பாதிப்புக்கு வியாபாரிகள் உள்ளாக நேரிடும். திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் சொத்து வரி ஏறாமல் பார்த்துக் கொண்ட நிலையில், திமுக ஆட்சி வந்ததும் சொத்து வரியை ஏற்றி விட்டு எங்கள் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். தேர்தலின் போது வாக்குறுதி அளித்த திமுக சொத்து வரியை குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களின் பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது. வேளாண் பாதுகாப்பு மண்டலம் மாநிலப் பட்டியலில் வருகிறது. 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதனை அதிமுக தடுத்து நிறுத்தி ரத்து செய்தது.
தற்போது, டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க திமுக அரசு முன்வர வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. 152 அடியாக உயர்த்திடும் வகையில் அணையின் உறுதித்தன்மையை ஆராய குழு அமைக்கப்பட்டது.
அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கு அதிமுக ஆட்சியின் போது கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. கூட்டணி வருபவர்கள் கோடிக்கணக்கில் பணம் கேட்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது, திமுக கொடுத்ததைத்தான் அவர் சொல்லி இருக்கிறார். எங்களிடம் எப்படி அவர்கள் வருவார்கள். திமுக-தான் கணக்கிலேயே ரூ. 10 கோடி, ரூ. 15 கோடி கொடுக்கும் போது அவர்கள் எங்களிடம் எப்படி வருவார்கள் என்ற பொருள்படியே அவர் பேசியுள்ளார்.
அதிமுக கள ஆய்வுக் கூட்டங்கள் கலவரம் நடப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளது, அவர் மிகுந்த அனுபவம் உள்ளவர். இப்போதுதான் வந்திருக்கிறார். கலவரக் கூட்டம் திமுக-வில் தான் நடந்தது. அதை அவர் மறந்து பேசுகிறார். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் திமுக-வினர் தாக்குதல் நடத்தினர். அது புகார் கொடுக்க காவல்நிலையம் சென்றபோது அடித்து உதைத்தனர். அதுதான் கலவரம். அவர்களுடைய கட்சிதான் கலவரக் கட்சி.
அதிமுக ஆரோக்கியமான கட்சி. திமுக போல அடிமையான கட்சி இல்லை. சுதந்திரமாக செயல்படுகிற கட்சி. வாரிசு அரசியலுக்கு இங்கு இடமில்லை. கட்சிக்கு உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் பதவிக்கு வரலாம். அதிமுக கூட்டத்தில் கருத்து சுதந்திரம் உள்ளது. கருத்துக்களை பரிமாறி நல்ல ஆலோசனைகளை பெற்று வருகிறோம். திமுக போல விருந்து போட்டு செல்லும் கூட்டம் எங்களுடையது இல்லை" என்று அவர் கூறினார்.