அரியலூர்: அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், நடந்த உண்மையான நிகழ்வை மறைக்கும் வகையில் காட்சிகளின் ஒரு பகுதியை திரித்து, ராணுவ வீரர் ரஞ்சித்குமாரை போலீஸார் வலுக்கட்டாயமாக கையாண்டதாகத் தோன்றும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோ காவல்துறையை அவதூறு செய்யும் வகையில் திரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளதாக, மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித்குமார். இவர், கடந்த 25-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது சித்தப்பா குடும்பத்துக்கும் தனது குடும்பத்துக்கும் உள்ள பிரச்சினையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அவரை அங்கிருந்த அப்புறப்படுத்தி காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ராணுவ வீரரை காவல்துறையினர் வலுகட்டாயமாக இழுத்து தூக்கிச் சென்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.
இந்நிலையில், மாவட்ட காவல்துறை சார்பில் அதற்கு விளக்கம் அளித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன், அவரது தம்பி சந்தோஷம் என்பவருக்கும் கடந்த 20.09.2024 அன்று பூர்வீக இடத்தில் வீடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் 21.09.2024 அன்று விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உரிமையியல் தொடர்பான தகராறு என்பதால், புகார்தாரர்கள் சிவில் நீதிமன்றத்தின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்து தீர்வுகளைப் பெற அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே அசாமில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் வரதராஜனின் மகன் ரஞ்சித்குமார், எதிர் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அது உரிமையியல் தொடர்பானது என்று முடிவு செய்யப்பட்டு, இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது. ஆனால், கடந்த 25-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ராணுவ உடையில் வந்த ரஞ்சித்குமார், திடீரென பிரதான நுழைவாயில் முன் அமர்ந்து வழி மறித்ததால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமுக்கு வந்த வாகனங்கள், பொதுமக்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
அப்போது, பணியில் இருந்த காவலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து செல்வதாகவும், தங்களது குறைகளை கூறலாம் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். அப்போது, போலீஸாரை கைகளால் தள்ளி, மிரட்டும் வகையில் ரஞ்சித் குமார் சைகை காட்டி செயல்பட்டார். இதனால் போலீஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தை பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்தனர்.
உண்மையான நிகழ்வை மறைக்கும் வகையில் காட்சிகளின் ஒரு பகுதியை திரித்து, ராணுவ வீரர் ரஞ்சித்குமாரை போலீஸார் வலுக்கட்டாயமாக கையாண்டதாகத் தோன்றும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோ காவல்துறையை அவதூறு செய்யும் வகையில் திரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளனர். ஆனால், ரஞ்சித்குமார், "தான் செய்தது சட்டத்துக்கு எதிரானது. தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டேன்" என உறுதியளித்து மன்னிப்பு கடிதம் அளித்துள்ளார்,” என காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.