மதுரை: மதுரை அருகே அ.வள்ளாளப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை 52 கிராம மக்கள் பங்கேற்ற கூட்டத்தில், இத்திட்டம் அனுமதிப்படாது என்ற உத்தரவை தமிழக முதல்வர் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி பகுதிகளை உள்ளடக்கிய கிராமங்களில் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் கனிமங்களை வெட்டி எடுக்க வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு நவ. 7-ல் ஏலம் விட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டி உள்ளிட்ட 20 கிராமங்களின் வாழிடங்கள், விவசாயம், இயற்கை வளங்கள், தொல்லியல் சின்னங்கள் அழிந்துவிடு்ம் என இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அரிட்டாபட்டி உள்ளிட்ட 25-க்கும் மேலான கிராமங்களில் நடந்த கிராமசபைக் கூட்டங்களில் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அ.வல்லாளபட்டி வெள்ளிமலையாண்டி கோயில் முன்பு 52 கிராம மக்கள் திரளாக பங்கேற்று தீர்மானம் நிறைவேற்றினர். இதில் இயற்கையோடு இணைந்து வாழும் எங்களது வாழ்வாதாரத்தை சிதைக்கும் எந்த நாசகார திட்டத்தையும் ஒருபோதும் ஏற்க மாட்டோம். பல்லாயிரம் ஆண்டு வரலாறுடைய அ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி பகுதி மக்களின் வாழ்விடங்களை அழிக்க நினைக்கும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. இதை ஏற்று, தமிழக அரசு இத்திட்டத்தை அனுமதிக்காது என்பதற்கான உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பிக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். எம்.பி., எம்எல்ஏ-க்கள், மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவைகளில் குரல் எழுப்ப வேண்டும். இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மற்றும் தொல்லியல் மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.