தமிழகம்

சென்னை மெட்ரோ தூண்களில் எண்கள் கட்டாயம் இருக்க வேண்டும் | உங்கள் குரல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் தூண்களில் எண்கள் கட்டாயம் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்கள் குரலில் வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில், 20 உயர்மட்ட ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக உயர்மட்ட பாதைகள் அமைந்துள்ளன.

இந்த உயர்மட்ட பாதை, உயர்மட்ட ரயில் நிலையங்கள், நூற்றுக்கணக்கான தூண்கள் மீது அமைந்துள்ளன. இந்த தூண்களை பற்றி விவரத்துக்காக அதில் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த எண்கள் பொதுமக்களுக்கு உதவியாகவும் இருக்கிறது. தூண்களின் எண்களை வைத்து, குறிப்பிட்ட முகவரியை அடையாளம் கண்டு, பொதுமக்கள் எளிதாக சென்றடைவர்.

இந்நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் தூண்களில் உள்ள எண்களை மறைத்து, விளம்பர பலகை வைக்கப் பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால், குறிப்பிட்ட முகவரியை அறியமுடியாமல் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உங்கள் குரலில் சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஒருவர் கூறியதாவது: ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பெரிய கட்டிடம், முக்கிய வாசகம், கட்டிட எண் ஆகியவை அந்த இடத்தில் உள்ள ஒரு முகவரியை அடையாளம் காண பேருதவியாக இருக்கும்.

அந்த வகையில், மெட்ரோ தூண்களில் இடம்பெற்றுள்ள எண்கள், குறிப்பிட்ட முகவரிக்கு செல்ல உதவியாக இருக்கிறது. ஆனால், கோயம்பேடு - வடபழனி பாதையில் மெட்ரோ ரயில் தூண்களில் உள்ள எண்களை விளம்பர பலகை வைத்து, மறைத்து உள்ளனர். இதனால் குறிப்பிட்ட எண்ணை வைத்து, முகவரியை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோல, பல இடங்களில் தூண்களின் எண்களை மறைத்துள்ளனர். தூண்களில் விளம்பர பலகை வைத்தாலும், அதற்குகீழ் எண்கள் தெளிவாக தெரியும் விதமாக இடம் பெற வேண்டும். இது,பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT