தமிழகம்

சாலை விபத்தில் உயிரிழந்த புதுக்கோட்டை பெண் காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிப்புரிந்துவந்த விமலா (வயது 28) இன்று காலை 09.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், பள்ளத்துப்பட்டியிலிருந்து பணி நிமித்தமாக புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த நான்குசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பெண் காவலர் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

பெண் காவலர் விமலா உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். விமலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT