படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
தமிழகம்

இருளில் மூழ்கும் மதுரை பெரியார் பேருந்து நிலையம்: இரவில் பயணிகள் அச்சம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: பெரியார் பேருந்து நிலையத்தில் போதுமான மின்விளக்குகள் இல்லாததால் இரவில் பேருந்து நிலையம் வளாகம் இருளில் மூழ்கி வருகிறது. அதனால், பயணிகள் இரவில் பேருந்துகளுக்காக காத்திருக்க அச்சமடைந்துள்ளனர்.

மதுரை மாநகரின் மையப் பகுதியான பெரியார் நிலையத்தில், தற்போதைய பெரியார் பேருந்து நிலையம் கடந்த 1921-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. அப்போது அந்த பேருந்து நிலையம் மத்திய பேருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது. 1971 முதல் பெரியார் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. 2018-ம் ஆண்டில் மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பெரியார் பேருந்து நிலையத்தை புதுப்பித்து கட்டுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டது.

அதன் அடிப்படையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கட்டிய பெரியார் பேருந்து நிலையத்தை, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையம் வளாகத்தில் மற்றொரு பகுதியில் திருப்பரங்குன்றம் சாலையில் மாநகராட்சிக்கு நிரந்தர வருவாய் தரக்கூடிய வகையில் ‘வணிக வளாகம்’ கட்டப்பட்டது. பேருந்து நிலையம் கட்டுவதற்கு ரூ.55 கோடியும், வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.119.56 கோடியும் ஒதுக்கப்பட்டது.

பழைய பேருந்து நிலையம் இட நெருக்கடியுடன் போதிய வசதியில்லாமல் இருந்ததாலேயே, புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஆனால், புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு வழங்கிய முக்கியத்துவம் பேருந்து நிலையம் கட்டுவதற்கு வழங்கப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் போதிய திட்டமிடுதல் இல்லாமல் அவசர கோலத்தில் கட்டப்பட்டது. திமுக ஆட்சியில் அதனை சரி செய்யாமலே திறந்துவிட்டனர்.

அதனால், இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ பேருந்து நிலையத்துக்கு பழைய பெரியார் பேருந்து நிலையமே பரவாயில்லை என்கிற வகையில் பேருந்துகள் வந்து நிற்பதற்கு போதிய இடவசதியில்லாமல் செயல்படுகிறது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் போதுமான மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. பெரியார் நிலையம் பகுதியில் கடந்த காலத்தில் வழிப்பறி திருடர்கள் நடமாட்டம் அதிகளவு காணப்பட்டது.

இப்பகுதிகளில் ரயில் நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் இருப்பதால் வெளியூர் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருவார்கள். அவர்களை குறி வைத்து முன்பு வழிப்பறி அதிக அளவு நடந்தது. அதன் பிறகு பேருந்து நிலையம், அதன் அருகில் உள்ள ரயில் நிலையம் போன்றவை நவீன வசதிகளும், இரவை பகலாக்கும் மின் விளக்குகள் வைக்கப்பட்டதோடு, போலீஸார் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டதால் வழிப்பறிகள் தடுக்கப்பட்டுள்ளன.

பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்கின்றனர். ஆனால், தற்போது பெரியார் பேருந்து நிலையத்தின் வளாகத்தில் போதுமான மின் விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கி கிடப்பது பயணிகளுக்கு பேருந்து நிலையம் வளாகத்தில் நீண்ட நேரம் நிற்பதற்கு அச்சமாக உள்ளது. மேலும், பெரியார் பேருந்து நிலையத்தின் ஆங்கிலம் எழுத்து டிஸ்பிளேயில் ‘யூ’ என்ற எழுத்து எரியவில்லை. அதனால், இரவில் இந்த எழுத்துக்கள் ஒளிரும் போது எழுத்துப் பிழையாக பேருந்து நிலையத்தின் பெயர் தெரிகிறது.

மாநகராட்சி மேயர் இந்திராணியிடம் கேட்டபோது,"உடனடியாக பேருந்து நிலையத்தை அதிகாரிகளை பார்வையிட செய்து மின் விளக்குகள் எரியாமல் இருந்தால் அதை எரிய வைப்பதற்கும், போதுமான மின் விளக்குகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT