யாரைத் தொட்டால் தமிழக அரசியலில் ஜெயிக்க முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து, பாசிச பாஜக, பாயாச திமுக என மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை கடுமையாக எதிர்த்து வருகிறார் தவெக தலைவர் நடிகர் விஜய். அதுமட்டுமில்லாது பெரும்பான்மையாக உள்ள சமுதாயங்களை தன்னை நோக்கி திருப்பும் முனைப்பிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், தமிழகத்தின் மிகப்பெரிய வாக்கு வங்கியான மீனவர் சமூகத்தை தங்கள் பக்கம் திருப்பும் வேலைகளை தவெக - வினர் கச்சிதமாக செய்து வருகின்றனர்.
அரசியலுக்கு வரும் முன்பாகவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த ஸ்னோலின் உள்ளிட்டவர்களின் குடும்பத்திற்கு இரவோடு இரவாகச் சென்று ஆறுதல் கூறியவர் விஜய். அண்மையில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்பதைக் கண்டித்து அறிக்கை விட்டார். அத்துடன், தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், மீனவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் நெல்லை மணவாளக்குறிச்சி அரியவகை மண் ஆலை விரிவாக்கத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, ஸ்னோலின் தாய் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தவெக-வில் இணைந்திருக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் தூத்துக்குடி மீனவர்கள் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். கடந்த தேர்தல்களில் அதை தங்களுக்கான ஆதவு வாக்குகளாக மாற்றிக் கொண்டது திமுக. இந்த வாக்குகளை இப்போது தங்கள் பக்கம் திருப்பும் வேலையில் தவெக இறங்கி இருக்கிறது.
அதன் தொடக்கம் தான் ஸ்னோலின் குடும்பத்தினர் தவெக-வில் இணைந்தது என்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மீனவர் வாக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதேபோல், மணல் ஆலை விரிவாக்கத்தில் நெல்லை மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பதால் அந்த மாவட்ட மீனவர்களின் கவனமும் இப்போது விஜய் பக்கம். இதேபோல் நாகை மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ இளைஞர்கள் மற்றும் பெண்களை நாதக-வில் இருந்து விலக்கி தவெக-வில் இணைத்திருக்கிறார் அந்த மாவட்ட தவெக செயலாளர் சுகுமாரன்.
இப்படி மீனவ நண்பனாக உருவெடுக்கும் விஜய், அடுத்ததாக மீனவர் பிரச்சினைகளுக்காக பெரும் போராட்டத்தை விரைவில் நடத்த இருப்பதாக கூறுகிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் சோகமாக உள்ளது. மத்திய - மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய தீர்வைச் சொல்லவில்லை என்ற ஆதங்கம் மீனவ மக்களுக்கு இருக்கிறது.
இந்தப் பிரச்சினைக்காக மீனவ மக்களை திரட்டி ராமநாதபுரம் அல்லது நாகப்பட்டினத்தில் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தை நடத்த விஜய் தயாராகி வருவதாக தவெக தரப்பில் சொல்கிறார்கள். இதன் மூலம், அதிமுக மற்றும் நாதக-வுக்கு ஆதரவாக இருக்கும் மீனவர் வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டு வருவதே விஜய்யின் திட்டம். சினிமாவில் மீனவ நண்பனாக, படகோட்டியாக எம்ஜிஆர் நடித்ததால் தான் இன்றளவும் மீனவர்கள் அதிமுக அனுதாபிகளாக இருக்கிறார்கள். அந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட விஜய்யும் மீனவ நண்பனாக அவதாரம் எடுக்கிறார். பார்க்கலாம்!