தமிழகம்

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிமுறைகளுக்கு செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்களை அளித்துள்ளேன்.

குறிப்பாக, அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பி்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில், அந்த மனு மீது இன்னும் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை டிச.2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT