நீலகிரி மாவட்டத்தில் உறை பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால், கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவும். வெப்ப அளவு சில நாட்களில் மைனஸ் டிகிரி செல்சியஸுக்கும் கீழ் இறங்கும். உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறிப் பயிர்கள் கருகும். காலை முதல் மாலை வரை வெயிலும், மாலை முதல் மறுநாள் விடியல்காலை வரை பனிப்பொழிவும் நிலவும்.
இந்நிலையில், நடப்பாண்டு பனிப்பொழிவு சற்று தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக நீர் பனிப்பொழிவு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று உறை பனிப்பொழிவு தொடங்கியது. உதகை குதிரைப் பந்தய மைதானத்தில் உறைபனி பொழிந்து, வெண் கம்பளம் விரித்ததுபோல் புல்வெளி காட்சியளித்தது.
உதகையில் நேற்று குறைந்தபட்சமாக 10 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடும் குளிரிலிருந்து தப்ப பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்கின்றனர். இந்த பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.