கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் திட்டத்தின்கீழ் 200 ஏழை, எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமை வகித்து பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

“2026 தேர்தலில் கோவையின் பத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்” - வானதி சீனிவாசன் நம்பிக்கை

இல.ராஜகோபால்

கோவை: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என, பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் திட்டத்தின்கீழ் 200 ஏழை, எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடந்தது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமை வகித்து பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “சுயம் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்து பின் தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேர்மையான முறையில் வேலை செய்தால் உங்களை சுற்றி ஒரு பெரிய வட்டம் உருவாகும். பாஜக அரசியல் கட்சி மட்டுமல்ல மக்கள் சேவை என்பது தான் இக்கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “கோவை தெற்கு தொகுதியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக மிகவும் மோசமான நிலையில் காணப்படும் சாலைகளை முதல்வர் அறிவித்த ரூ.200 கோடி நிதியில் முன்னுரிமை அளி்த்து புனரமைக்க மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்துவேன்.

ஆட்சியில் பங்கு குறித்து அமைச்சர் பெரியசாமி கூறியது அவர்கள் கட்சி கூட்டணியில் உள்ள சில கட்சியினருக்கு தெரிவித்துள்ள பதிலாக இருக்கலாம். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்பதில் தவறே கிடையாது. அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து.

பாஜக-வை பொறுத்தவரை மிகப்பெரிய கூட்டணி என்ற போதும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை நடத்துவது தான் வழக்கம். சு.வெங்கடேசன் எம்பி மத்திய அரசு என்ன நல்ல காரியம் செய்தாலும் குறை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். மத்திய அரசின் பணிகளுக்கான தேர்வு பொங்கல் தினத்தன்று இருப்பது குறித்து விசாரித்து தகவல்களை மத்திய நிதி அமைச்சரிடம் தெரிவிப்போம்.

மதுக்கரை அருகில் ரயில்வே துறை ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. முக்கிய பகுதிகளில் இதுபோன்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வனவிலங்கு மனிதர்கள் இடையே நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் மீண்டும் நடத்தப்பட வேண்டும். வேட்டை தடுப்பு காவல்களின் கோரிக்கை நியாயமானது. 2026 தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்க்கத்தான் போகிறார்” இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT