திருப்பதிக்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் பால் நிறுவனத்தில் உச்ச நீதிமன்றம் நியமித்த குழு நேற்று சோதனை மேற்கொண்டது.
திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி ஃபுட் என்ற பால் நிறுவனம், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக டன் கணக்கில் நெய் அனுப்பி வந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டது.
அதில், ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் மூலம் திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருப்பதாகவும், சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம், தங்கள் தயாரிப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும், எந்தப் பரிசோதனைக்கும் தயார் என்றும் அறிவித்தது. இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர். தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மாதிரி எடுத்துச் சென்றனர். மேலும், சென்னையில் இருந்து வந்த மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்நிறுவனத்தில் சோதனையிட்டனர்.
அதேநேரத்தில், ஆந்திர மாநில அரசும் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து, விசாரணை நடத்தியது. ஆனால், திருப்பதி லட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவை கலைத்து, மத்திய அரசு மற்றும் ஆந்திர அரசு சார்பில் 5 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து, முறையாக விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அமைத்த 5 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்துக்கு வந்தனர். நெய் மற்றும் பால் பொருட்களைப் பார்வையிட்டு, 7 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர். அங்கு தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளையும் சேகரித்து சென்றனர்.