தமிழகம்

“புதுச்சேரி அரசும், துணைநிலை ஆளுநரும் இணக்கமாக உள்ளோம்” - அமைச்சர் நமச்சிவாயம் கருத்து 

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு, பல்கலைக்கழகம், கல்வி மேம்பாட்டு கேந்திரம் ஆகியவை இணைந்து நவீனக் கல்வி, பண்பாடு, இந்திய அறிவு முறையின் மறுமலர்ச்சி, கல்வியில் தாய்மொழி வழி கல்வியை செயல்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பைக் கொண்டாடும் நோக்கில் தேசிய ஞானக் கும்பம் நிகழ்சியை கடந்த 21-ம் தேதி முதல் 3 நாட்கள் நடத்தியது.

3-வது நாளான சனிக்கிழமை நிறைவு விழா நடைபெற்றது. புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேசிய கல்வி கொள்கை தொடர்பாக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.

எதனால் முதல்வர் ரங்கசாமி இந்த விழாவை புறக்கணித்தார், என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். ஆயிரம் காரணம் இருக்கலாம், எனக்கு எப்படி தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணியையும், பிரதமர் மக்கள் சேவை ஆற்றியதன் விளைவாக மகராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறோம். அதேபோல் ஜார்க்கண்ட மாநிலத்தில், அதிகப்படியான இடங்களை பாஜக பெற்றுள்ளது.

நாளுக்கு நாளுக்கு பாஜகவின் வளர்ச்சி அதிகரிந்து கொண்டுள்ளது. பாஜகவின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். பதுச்சேரி பாஜகவில் பிளவு என்பதே இல்லை. தனி அணியாக செயல்படுகிறார்களா? என்பதை சம்மந்தப்பட்ட 7 எம்எல்ஏவிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த அரசு எந்தெந்த கோப்புகளை அனுப்புகிறதோ? நியாயமான கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எந்த கோப்புக்கும் அவர் தடையாக இல்லை. ஆளும் அரசும், துணைநிலை ஆளுநரும் இணக்கமாக இருக்கிறார்கள். இருவரும் ஒத்த கருத்தோடு மக்கள் சேவை ஆற்றுகிறார்கள். என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் தவறு நடந்து இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி எங்கள் ஆட்சியின் மீது குறை சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம். எத்தகைய விசாரணையாக இருந்தாலும் இந்த அரசு சந்திக்கும். அவர்கள் ஆட்சி வரும்போது ஊழல்வாதிகளை சிறையில் தள்ளட்டும்” இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.

SCROLL FOR NEXT