சென்னை: போலி தூதரக சான்றிதழ் சமர்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது. அதில் எந்தவிதமான முறைகேடுகளும் நிகழாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒரு பகுதியாக, மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வுக்கு உட்படுத்தி சரிபார்ப்பது வழக்கம். அப்படி ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ததில், நடப்பு ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த 6 பேரின் தூதரக சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. அதில் 3 பேர் எம்பிபிஎஸ் இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றவர்கள்.
இந்த நிலையில், 6 பேரும் இனிமேல் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்பதில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அந்த இடங்கள், வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள சிறப்பு கலந்தாய்வில் காலி இடங்களாக சேர்க்கப்படும். போலி சான்றிதழ் அளித்த விவகாரத்தில் தொடர்பு உடையவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.