கதரையும் கைகலப்பையும் என்றைக்குமே பிரிக்கமுடியாது என்பதை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவை காங்கிரஸார் பொதுவெளியில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். கோவை காங்கிரஸானது கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு என மூன்று மாவட்டங்களாக உள்ளது.
இதில், முக்கியமானது கோவை மாநகர் மாவட்டம். இதன் தலைவராக மயூரா எஸ்.ஜெயக்குமார் இருந்தார். ஆனால், மாநிலப் பொறுப்பிலும் இருந்து கொண்டு மாவட்ட தலைவராகவும் இருக்கலாமா என எதிர்க்கோஷ்டி போர்க்கொடி தூக்கியது. இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட தலைவர் பதவியை துறந்த மயூரா, தனது இடத்தில் தனக்கு அடக்கமான கருப்புசாமியை உட்காரவைத்தார். அத்துடன் மயூரா அகில இந்திய செயலாளராகவும் ஆனார்.
மாவட்ட தலைவர் பதவியைத் துறந்தாலும் இன்றளவும் மாநகர் மாவட்ட காங்கிரஸின் லகான் மயூரா வசமே உள்ளதாகச் சொல்கிறார்கள். இதனால் இவருக்கும் ஐஎன்டியுசியைச் சேர்ந்த கோவை செல்வன் கோஷ்டிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். கோவை விமான நிலையத்தில் அதுதான் மோதலாக வெடித்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநகர் காங்கிரஸ் நிர்வாகிகள், “கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் வேணுகோபால் வயநாடு பிரச்சாரத்தை முடித்துவிட்டு டெல்லி செல்வதற்காக கடந்த 17-ம் தேதி இரவு கோவை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை வழியனுப்ப மயூரா ஜெயக்குமார் தரப்பினரும், கோவை செல்வன் தரப்பினரும் விமான நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது மயூராவின் செயல்பாடுகள் குறித்து கே.சி.வேணுகோபாலிடம் எதிர் தரப்பினர் புகாரளித்தனர். இதன் தொடர்ச்சியாக விமான நிலைய வளாகத்திலேயே மயூரா தரப்பினருக்கும், கோவை செல்வன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.
மூன்றரை ஆண்டுகள் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்த மயூரா கட்சி வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. தொடர்ச்சியாக மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட தலைமை இவருக்கு வாய்ப்பளித்தும் இவரால் ஜெயிக்க முடியவில்லை. இருந்த போதும் மேலிடத்தில் லாபி செய்து பதவிகளைப் பெற்றுவிடும் இவர், இங்குள்ள யாரையும் மதிப்பதில்லை.
கோவையில் மாநில நிர்வாகிகள் 10 பேர் இருக்கிறார்கள். அதில் 9 பேர் இவருக்கு எதிராக இருக்கிறார்கள். மாநகர் காங்கிரஸை இவரது பிடியிலிருந்து மீட்க இவரை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறார்கள்” என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை செல்வன், “விமான நிலையத்தில் மயூரா ஜெயக்குமார் எங்களிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்துவிட்டு போலீஸிலும் புகார் அளித்துள்ளோம்” என்றார். மயூரா ஜெயக்குமாரோ, “என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியாலும், தலைமைக்கு என் மீது உள்ள நம்பிக்கையை கெடுக்கும் வகையிலும் எதிர் தரப்பினர் வேண்டுமென்றே தொடர்ந்து என்னை வம்புக்கு இழுக்கின்றனர்.
எனது பதவிக்காலத்தில் கட்சியை வளர்க்க நான் அரும்பாடுபட்டுள்ளேன். கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்களையும் முன்னின்று நடத்தியுள்ளேன். மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கருப்புசாமியும் கட்சியில் சீனியர் தான். அவரும் இந்தக் கட்சிக்காக பாடுபட்டுள்ளார். எதிர் தரப்பினரின் செயல்பாடு குறித்து கட்சி தலைமையிடம் நாங்களும் புகாரளித்துள்ளோம்” என்றார். இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு தான் காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்கிறார்கள்!