இந்திய கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பிரிவு சார்பில், நாட்டின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த, நாடு தழுவிய 2 நாள் கடல் விழிப்புப் பயிற்சியான `சி-விஜில்' நேற்று தொடங்கியது.
இந்தியாவின் 11,098 கி.மீ. கடற்கரை முழுவதும் நடைபெறும் இப்பயிற்சியில், 6 மத்திய அமைச்சகங்கள், 21 மத்திய, மாநில அமைப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்புடன் தொடர்புடைய முகமைகள் ஈடுபட்டுள்ளன.
`சீ-விஜில் 24' என்று பெயரிடப்பட்டுள்ள இப்பயிற்சி, துறைமுகங்கள், எண்ணெய்க் கசிவு போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவையாக கணிக்கப்பட்டுள்ள பகுதிகள், கடல்வழி தொலைத்தொடர்பு கேபிள் தரையிறங்கும் நிலையங்கள் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர சொத்துக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை ஆகியவையும் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் பரந்த கடற்கரை மற்றும் 24 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நாட்டின் தனிப் பொருளாதார மண்டலம் ஆகியவற்றின் பாதுகாப்பில் இப்பயிற்சி கவனம் செலுத்துகிறது.
இப்பயிற்சியில், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், மீனவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர். மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில், இந்திய கடற்படை, என்சிசி மாணவர்கள், சாரணர்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை கடல்சார் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டங்களில் ஈடுபடுத்தியுள்ளது.
`சீ-விஜில்' பயிற்சி என்பது நாட்டின் கடல்சார் பாதுகாப்புக்கான கட்டமைப்பை மேம்படுத்துவதையும், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு பற்றிய தயார் நிலையின் முழுமையான மதிப்பீட்டை உறுதி செய்வதையும் இலக்காகக் கொண்ட ஒரு முக்கியமான பயிற்சியாகும்.
அத்துடன், இந்தியாவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இந்தியக் கடற்படையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் இந்தப் பயிற்சி பிரதிபலிக்கிறது.