டங்ஸ்டன் சுரங்கம் 5,000 ஏக்கர் எல்லைக்குள் அமைந்திருக்கும் பெருமாள்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. 
தமிழகம்

அரிட்டாபட்டியில் ‘டங்ஸ்டன் சுரங்கம்’ அமைக்க வலுக்கும் எதிர்ப்பு - பின்புலம் என்ன?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க நடந்த ஏலத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், உடனடியாக அதனை ரத்து செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்திருக்கிறது.

கடந்த நவ. 7-ம் தேதி சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 4-வது ஏலத்தில், மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ஹிந்துஸ்தான் நிறுவனம் எடுத்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று முன்தினம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் மனுவை அளித்தனர்.

இதுகுறித்து மதுரை இயற்கை பண்பாட்டு அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் தமிழ்தாசன் கூறியதாவது: 2,300 ஆண்டுகள் தொன்மையான மாங்குளம் தமிழிக் கல்வெட்டு மீனாட்சிபுரம் ஓவா மலையில் அமைந்துள்ளது. இங்கு நான்கு குகைத் தளத்தில் மொத்தம் ஆறு தமிழி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மாங்குளம் தமிழி கல்வெட்டில் சங்ககால பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் பொறித்த 2 கல்வெட்டுகளும், அதில் செழியன், வழுதி போன்ற பாண்டியர் குடிப் பெயர்களும், பட்டப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரத்தை பெற்று தந்தது இந்த கல்வெட்டுகள்தான். மாங்குளம் கல்வெட்டுதான் இதுவரை கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகளில் காலத்தால் பழமையானதாகும். இதேபோல, அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் உள்ள குகைத்தளத்தில் ஈராயிரமாண்டுகள் தொன்மையான இரண்டு தமிழிக் கல்வெட்டும் காணப்படுகின்றன.

அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பமும், அதன்கீழே தமிழ் வட்டெழுத்து கல்வெட்டும் காணப்படுகிறது. அரிட்டாபட்டி கழிஞ்ச மலையில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான குடைவரை கோயில் அமைந்துள்ளது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்களால் மலைகளை குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் இதுவாகும். பாசுபத சமயத்தை சேர்ந்த இலகுலீசரரின் சிற்பம் இங்கே செதுக்கப்பட்டுள்ளது. அரிட்டாபட்டி கழிஞ்சமலை அடிவாரத்தில் ஆனைகொண்டான் கண்மாய் அமைந்துள்ளது.

இக்கண்மாயில் 700 ஆண்டுகள் பழமையான இரு மடை தூண்கள் உள்ளன. இது போல் இப்பகுதியில் பழமையான தர்கா, கோயில்களும் உள்ளன. வெள்ளரிப்பட்டி, நரசிங்கம்பட்டி, பெருமாள்பட்டி, அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களுக்கு இடையில் பெருமாள் மலை வனப்பகுதியும் அமைந்துள்ளது. பெருமாள்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மேற்குச் சரிவும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பகுதிக்குள் வருகிறது.

சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்ட 5,000 ஏக்கர் எல்லைக்குள் வருகிற நிலப்பரப்புக்குள் வாழும் மக்கள், அவர்களின் வீடுகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவற்றின் நிலை என்ன என்பதையும், இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழி கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், மகாவீரர் சிற்பம், குடைவரை கோயில், பிற்கால பாண்டியர் கோயில், தொன்மையான ஆனைகொண்டான் கண்மாய் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வரலாற்று சின்னமாக இருக்கிற தொல்லியல் சின்னங்களின் நிலை என்ன என்பதையும், பல்லுயிர்களின் வாழிடமாக உள்ள பெருமாள் மலை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பல்லுயிரிய மரபு தளம் ஆகியவற்றின் நிலை என்ன என்பதையும் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் தெளிவாக விளக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்கம் 5,000 ஏக்கர் பரப்போடு நிற்கப் போவதில்லை.

அதனால் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை உடனடியாக ரத்துசெய்து மதுரை மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழும் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்: எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர்கள் கூறகையில், ‘மத்திய அரசால் ஏலம் விடப்பட்டாலும், தமிழக அரசின் 15-க்கும் மேற்பட்ட துறைகள் தடையின்மை சான்றிதழ்கள் வழங்கினால் மட்டுமே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முடியும். இதனால் கடிவாளம் மாநில அரசின் கையில்தான் உள்ளது. தமிழக அரசு எக்காரணத்தைக்கொண்டும் அனுமதிக்காது என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது. இவ்விஷயத்தில் அனுமதி தரப்பட மாட்டாது என்ற உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும்’ என்றனர்

SCROLL FOR NEXT