சென்னை மாநகராட்சியில் 387 கிமீ நீளம் கொண்ட 471 பேருந்து தட சாலைகள் உள்ளன. 5 ஆயிரத்து 270 கிமீ நீளம் கொண்ட 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் உள்ளன. பேருந்து தடச் சாலைகளை மாநகராட்சி தலைமையகத்தில் உள்ள சாலைத்துறை பராமரித்து வருகிறது. உட்புற சாலைகள் அந்தந்த மண்டலங்கள் மூலமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதியில் செல்லும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை மாநகராட்சி சாலைத்துறை நேரடியாக பராமரித்து வருகிறது. இந்த சாலை கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே விஐபி சாலையாக இருந்து வருகிறது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் மாறி, மாறி முதல்வராக இருந்தபோது பயணித்த சாலை இது. இப்போது முதல்வராக உள்ள ஸ்டாலினும் இந்த வழியாகவே பயணித்து வருகிறார்.
அண்மைக் காலமாக இந்த சாலையில் முறையான பராமரிப்பின்றி தார் பெயர்ந்து பள்ளங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சாலையின் தென் பகுதியில் சிட்டி சென்டர் முதல் எல்லோ பேஜஸ் சிக்னல் வரை சென்னை குடிநீர் வாரிய இயந்திர நுழைவு வாயில்கள் (Machine Hole) சாலை மட்டத்தில் இல்லாமல், தாழ்வாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள், அந்த பள்ளத்தில் விழுந்து செல்கின்றன.
இயந்திர நுழைவு வாயில் கான்கிரீட்டை சுற்றியுள்ள தார் பெயர்ந்து, அவற்றின் அருகில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எல்லோ பேஜஸ் சிக்னலை கடந்து சென்றால் அந்த சாலை முழுவதும் பேட்ச் ஒர்க் சாலையாகவே காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் புதிதாக காரில் வருவோர் பள்ளத்தில் காரை இறக்கி, நிலைதடுமாறி அவதிக்குள்ளாகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதி வழியாக காரில் சென்ற பொதுமக்கள் கூறும்போது, "முதல்வர் பயணிக்கும் சாலை என்பதால் இது சிறப்பாக பராமரிக்கப்படும் என்பது பொதுவான எண்ணம். ஆனால் ஆங்காங்கே வரும் திடீர் பள்ளங்களால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதுபோன்ற பள்ளங்களில் காரை இறக்கி ஏற்றும்போது பெரும் சத்தம் எழுகிறது" என்றனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மின்சார கேபிள் பதிக்கும் பணிகள் தற்போதுதான் முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலை சீரமைக்கப்படும்" என்றனர்.