தமிழகம்

வத்தலக்குண்டு அருகே கூகுள் மேப் வழிகாட்டுதலில் சென்று சேற்றில் சிக்கிய மாற்றுத் திறனாளி ஐயப்ப பக்தர்

செய்திப்பிரிவு

கூகுள் மேப் உதவியுடன் 3 சக்கர வாகனத்தில் தவறான பாதையில் சென்று, வத்தலக்குண்டு அருகே சேற்றில் சிக்கிய கர்நாடகாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஐயப்ப பக்தரை போலீஸார் மீட்டனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் பரசுராமர்(25). மாற்றுத் திறனாளியான இவர், தனது மூன்று சக்கர மோட்டார் வாகனத்தில், சபரிமலைக்குச் சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் வாகனத்தில் தனியாக ஊருக்குப் புறப்பட்டார். வத்தலக்குண்டு அருகே கூகுள் மேப்பை பார்த்து குறுக்கு வழியில் செல்ல முயன்றார்.

இரவு 7 மணியளவில் எம்.வாடிப்பட்டி கண்மாய் அருகே பரசுராமர் சென்றபோது மூன்று சக்கர மோட்டார் வாகனம் சேற்றில் சிக்கியது. இதனால் அவரால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. தானாகவும் அதில் இருந்து மீளமுடியாத நிலையில், மங்களூரு போலீஸாருக்கு பரசுராமர் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மங்களூரு போலீஸார் திண்டுக்கல் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். பட்டிவீரன்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தவுடன் அதிகாலை 2 மணிக்கு நிகழ்விடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் சிலைமணி, எஸ்.ஐ., சேக்அப்துல்லா மற்றும் போலீஸார், சேற்றில் வாகனத்துடன் சிக்கித் தவித்த பரசுராமரை மீட்டனர்.

பரசுராமருக்கு தேவையான உதவிகளைச் செய்த போலீஸார், அவரை ஊருக்கு அனுப்பிவைத்து மங்களூரு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தமிழக போலீஸாருக்கு மங்களூரு போலீஸார் நன்றி தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT